நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் (புதன்கிழமை) 13 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் மூன்று தசாப்த காலமாக இந்தப் போர் இடம்பெற்றிருந்தது.
போரின் முடிவில் இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்றதாக அறிவித்து போருக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இறுதிப் போரின்போது நாற்பதாயிரம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறிருப்பினும் இந்த யுத்தத்தில் இலட்சக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் வருடாந்தம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதிவரை அனுஷ்டிக்கப்படுகிறது.
அதன்பின்னர் போரின் இறுதி நாளான 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் அனுஷ்டிக்கப்படும்.
அதன்படி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டதோடு, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு இன்று முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொது கட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதேநேரம், இனவிடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கி என்ற தொனிப்பொருளில் பொத்துவில்லிலும் பொலிகண்டியிலும் ஆரம்பிக்கப்பட்ட நடை பவணிகள் இன்று முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.