காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் கடந்த மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இதேவேளை, காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏனைய எட்டு சந்தேக நபர்களும் இன்று (வியாழக்கிழமை) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மொரட்டுவை மேயர் சமன் லால் பெர்னாண்டோ மற்றும் டான் பிரியசாத் உள்ளிட்ட எட்டு சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (18) கைது செய்தனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோர் நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் வாக்குமூலம் பதிவு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.