இலங்கையில் அன்றாட தேவைகளுக்கு செலவிட திறைசேரியில் பணம் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பான விரிவான அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.
அன்றாட நுகர்வுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான செலவினங்களுக்காக உடனடியாக நிதியைக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.
இந்த விடயம் இலங்கையை மாத்திரம் பாதிக்கும் பிரச்சினையல்ல எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
உணவு நெருக்கடி உலகளாவிய நெருக்கடியாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் நிலைமையை முன்னறிவிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் உலக வங்கி 30 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.