குரங்கு காய்ச்சல் குறித்து, இலங்கையின் வைத்தியசாலைக் கட்டமைப்பையும், வைத்தியர்களையும் தெளிவூட்டுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பிரதானியான வைத்தியர் சமித கினிகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இந்த நோய் நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில், நாட்டுக்கு வந்துள்ள குரங்கு காய்ச்சல் தொற்றுடைய வெளிநாட்டவர்களை அடையாளம்காண, விமான நிலைய தரப்புக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, விமான நிலையத்தில் குரங்கு காய்ச்சல் தொற்றுடைய நோயாளர்களை இனங்கண்டு, அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நோய் பரவும் தன்மையானது, கொரோனா பரவல் வேகத்துடன் ஒப்பிடுகையில், குறைந்த மட்டத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் நெருங்கிய தொடர்பைப் பேணும் நபர்களுக்கு இடையே இந்த நோய் இலகுவாக பரவும் தன்மை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றை கண்டறிவதற்கு பயன்படுத்தப்பட்டதைப் போன்ற உயிரியல் மாதிரி ஆய்வு முறைமையின் ஊடாக இந்த குரங்கு காய்ச்சல் நோயைக் கண்டறிய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.