தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து பதவியில் இருந்தால், பொதுஜன பெரமுனவின் இசைக்கு ஏற்ப ஆட வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நீடிக்க விரும்பினால், பொதுஜன பெரமுனவிற்கு பணிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தற்போதைய அரசாங்கத்தை பல கட்சி அரசாங்கம் என்று அழைக்க முடியாது. ஏனெனில் அது பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
புதிய அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து இருவரைத் தவிர ஏனையவர்கள் பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிட்டவர்கள்.
திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 21வது திருத்தம் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதால் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைப்பது சமநிலையில் உள்ளது.
21வது திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் ஏற்பாடுகள் எதுவும் இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மறுபுறம், இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களை நாடாளுமன்றத்திற்கு வரவிடாமல் தடுப்பதும் சமநிலையில் உள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.