கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக நாளாந்தம் 400 முதல் 500 மில்லியன் ரூபாய் வரை நாட்டுக்கு நட்டம் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து மற்றும் விநியோக முகாமைத்துவ பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அமல் குமாரகே இதனை தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து நெரிசல் காரணமாக எரிபொருள் விரயம், மற்றும் உழைக்கும் மக்கள் வேலை செய்யும் வீதிகளை மறிப்பதானது ஒரு நாடு என்ற ரீதியில் தாங்க முடியாத பொருளாதார இழப்பாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வாகனங்கள் நாடாளுமன்ற வீதி, கண்டி வீதி, காலி வீதி, ஹைலெவல் வீதி, ஹொரண வீதி, தெமட்டகொட – வெல்லம்பிட்டிய வீதி, நாவல – நாரஹேன்பிட்டி வீதி, ஒருகொடவத்தை – அம்பத்தளை வீதி, கீரிமண்டல மாவத்தை, ஹெக்கிட்டா – மட்டக்குளிய வீதி, லோ லெவல் ஆகியவற்றின் ஊடாக கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கின்றன.
இவற்றில் பெரும்பாலான வாகனங்கள் காலி வீதி, கண்டி வீதி, நீர்கொழும்பு வீதி மற்றும் ஹைலெவல் வீதி வழியாக கொழும்புக்குள் பிரவேசிக்கின்றன.
மோட்டார் சைக்கிள்கள் உட்பட சுமார் 9 இலட்சம் வாகனங்கள் இந்த வீதிகள் ஊடாக நாளாந்தம் கொழும்புக்குள் பிரவேசிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதில் 3 இலட்சத்து 14 ஆயிரத்து 231 கார்கள் மற்றும் ஜீப்புகள், 2 இலட்சத்து 40 ஆயிரத்து 756 முச்சக்கர வண்டிகள், 2 இலட்சத்து 11 ஆயிரத்து 320 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 28 ஆயிரத்து 989 வான்களும் உள்ளடங்குகின்றன.
நாளாந்தம் கொழும்புக்குள் நுழையும் பேருந்துகளின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 634 ஆகவும் பதிவாகுகின்றன.
நாளாந்தம் கொழும்பு நகருக்குள் இவ்வளவு வாகனங்கள் பிரவேசித்தாலும் அங்கு வரும் மக்களின் எண்ணிக்கை 1.9 மில்லியனை அண்மித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி, இருவர் பயணிக்கும் வகையில் ஒரு வாகனம் கொழும்பிற்குள் நுழைவதே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் என்பது தெளிவாகிறது.