சீன மக்கள் தொகை வளர்ச்சியில் எதிர்மறையான சூழ்நிலையை எதிர்கொள்வதால், அரசாங்கம் அதன் குடிமக்களை முன்கூட்டியே திருமணம் செய்து கொள்ளுமாறும் தலா மூன்று குழந்தைகளையாவது பிரசுவித்துக்கொள்ளுமாறும் கட்டாயப்படுத்தத் தொடங்கியுள்ளது.
கட்டாயத் தனிமைப்படுத்தல்கள் மற்றும் முடிவற்ற பூட்டுதல்கள் காரணமாக தங்கள் சொந்த வாழ்க்கை மிகவும் அழுத்தத்தில் இருப்பதால், தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வைக் கவனிக்க போதுமான நிதிப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று பெரும்பாலான பெற்றோர்கள் கருதுகின்றார்கள்.
குறிப்பாக, வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் விரக்தி, உணவுப் பற்றாக்குறை, வருமானமின்மை, விலைவாசி உயர்வு, உடல்நலப் பிரச்சினைகள் போன்றவை, நாட்டு மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் அரசாங்கத்தின் உத்தரவுகளை அடுத்து பொதுமக்கள் கடுமையான அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கின்றார்கள்.
சீனாவின் தேசிய புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின் படி, 2013-2019க்கு இடைப்பட்ட ஆறு வருட காலப்பகுதியில், சீன திருமணங்களின் எண்ணிக்கை 41சதவீதம் குறைந்துள்ளது, கடந்த ஆண்டு 7.6மில்லியன் ஜோடிகள் மட்டுமே திருமணத்திற்கு பதிவு செய்துள்ளனர்.
இது கடந்த 36ஆண்டுகளில் இல்லாத குறைந்தளவாகும். இதன் விளைவாக, சீனாவின் பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 7.5குழந்தைகளாக குறைந்துள்ளது. ஒன்பது மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களில் மக்கள்தொகை வளர்ச்சி எதிர்மறையாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, சீன கம்யூனிச தேசம் ‘ஒரு குழந்தை கொள்கையை’ கடுமையாக அமல்படுத்தியபோது தாங்கள் அல்லது அவர்களின் பெற்றோர்கள் அனுபவித்த வலி மற்றும் சித்திரவதைகளை நினைவில் வைத்திருப்பதனால் தற்போது தமது அடுத்த சந்ததியினர் தொடர்பில் கரிசனை கொள்பவர்களாகவும் உள்ளனர்.
கட்டாயக் கருக்கலைப்பு, திருமணமான தம்பதிகளை தொடர்ந்து கண்காணிப்பில் வைத்தமை, இரண்டாவது குழந்தைக்காகச் சென்றவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதித்தமை ஆகியவை முக்கியமான விடயங்களாகின்றன.
மேலும், தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெறுவதை எளிதாக்குவதற்கு அரசாங்கம் எந்தக் கொள்கை மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்றும் தற்போது அரசாங்கம் அதிக குழந்தைகளை விரும்பும்போது, மக்கள் அதனை விரும்பவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதேவேளை, பிறப்பு விகிதம் தொடர்ந்து குறையும் பட்சத்தில், சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், வரும் ஆண்டுகளில் தொழிலாளர் எண்ணிக்கையும் வெகுவாகக் குறையும்.
சீனப் பெண்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக, அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் நாட்டம் ஆண்களை விட குறைவாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.