சீனா தனது மனித உரிமை மீறல்கள் மற்றும் போலி வாக்குறுதிகளை மறைப்பதற்கு விளையாட்டுகளைப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை திபெத்திய ஆர்வலரான ஷமி லுஹாமோ முன்வைத்துள்ளார்.
நியூயோர்க்கை தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற மனித உரிமைகள் அறக்கட்டளையானது ஒஸ்லோ சுதந்திர மன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சீனா 2008ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் மற்றும் 2022 குளிர்கால ஒலிம்பிக் ஆகிய தொடர்களை தந்திரமாக தன்னலத்திற்கு பயன்பத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சீனாவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றாலும், தற்போது உலகெங்கிலும் உள்ளவர்களை நம்பவைக்க வேண்டிய சூழ்நிலையில் அந்நாடு உள்ளது.
ஆனால் சீனாவிற்குள்ளும் வெளியிலும் உள்ள சீனக் குடிமக்களுக்கு அதுவொரு சிறந்த நாடு என்று தொடர்ச்சியாக வலியுறுத்தும் செயற்பாகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அந்தச் செயற்பாட்டாளர் குறிப்பிட்டார்.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் மிச்சல் பச்லெட், இந்த வாரம் சீனாவின் ஷின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்தியத்திற்குச் செல்லும் போது, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை நேரில் அவதானிப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.
ஷின்ஜியாங்கிற்குள் ஐ.நா மனித உரிமை நிபுணர்கள் மற்றும் பிற மனித உரிமை கண்காணிப்பாளர்களைப் பிரவேசிப்பதற்கு அனுமதிக்குமாறு பல மனித உரிமைகள் குழுக்கள் சீன அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளன. எனினும் அவை நிராகரிப்பட்ட நிலையில் தற்போது உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம், திபெத்திய கலாசாரத்தின் அடையாளத்தை துடைத்தழிக்க சீனாவும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. புத்தர் மற்றும் பத்மசாம்பவர் சிலைகள் இடிப்பு, அடுத்த தலாய் லாமாவைத் தேர்ந்தெடுக்கும் அபத்தமான கூற்றுகள், காணொளிகளைப் பகிரவிடாமல் தடுத்து நிறுத்துதல் போன்ற செயற்பாடுகள் சீனாவின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
அதேநேரம், ஒஸ்லோ கூட்டத்தில், பத்திரிகையாளர்களுக்கு எதிரான நாடு கடந்த அடக்குமுறையை எதிர்த்துப் போராடும் சூழலைப் பாதுகாப்பதற்கான உரிமை, உய்குர்கள் இனப்படுகொலையின் உண்மைக் கதை, மற்றும் கட்டாரில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைத் தொடருக்கான ஆயத்தங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நெருக்கடிகள் பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டது.
ஒஸ்லோ சுதந்திர மன்றம் சர்வாதிகார ஆட்சிகளின் துஷ்பிரயோகங்களை அம்பலப்படுத்தவும், கருத்துப் பரிமாற்றத்தின் மூலம் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கவும், உலக நிகழ்ச்சி நிரலில் மனித உரிமைகளை உயர்த்தவும் முயல்கின்றமை குறிப்பிடத்தக்கது.