ஜம்மு-காஷ்மீரில் பெண்கள் கால்பந்து வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதிய காஷ்மீர் முன்னணி பெண் கால்பந்து வீராங்கனை மற்றும் யூரி அணியின் பயிற்சியாளரான நதியா நிகாத் தற்போது கேரள மகளிர் லீக்கில் பங்கேற்றுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் பெண்கள் கால்பந்து விளையாட்டில் ஈடுபடுவது பெரிதாகக் கருதப்படாத நிலையில், அங்கு புதிய அத்தியாயங்களை எழுதும் ஒரு வீராங்கனை இருக்கின்றார் நதியா நிகாட்.
தொழில்முறை வீராங்கனை மற்றும் பயிற்சியாளராக இருக்கும் அவர் கேரளாவின் திருசூரில் நடைபெறவுள்ள கேரள மகளிர் கால்பந்து லீக்கில் டொன் போஸ்கோ எஃப்சிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.
கோகுலம், கேரளா எஃப்சி போன்ற லீக் அணிகளை உள்ளடக்கிய கேரளாவின் சிறந்த தொழில்முறை லீக்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் அணியில் அவர் ஒரு முக்கிய நபராக இருக்கின்றார்.
அவர், ‘நாட்டின் சிறந்த மகளிர் தொழில்முறை லீக்கில் நான் எனது நேரத்தினை செலவழிக்கின்றேன். நான் புதிய விடயங்களைக் கற்றுக்கொள்கிறேன், மேலும் எனது ஆட்டம் நாளுக்கு நாள் சிறப்பாகிறது’ என்று கூறினார்.
‘கேரளாவில் நடைபெற்ற சீனியர் நஷனல் மகளிர் சாம்பியன்ஷிப்பில் ஜம்மு-காஷ்மீர் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய உடனேயே, லீக்கில் விளையாட எனக்கு வாய்ப்புகள் வந்தன.
தொழில் ரீதியாக புதிய விடயங்களை ஆராய்வதும், எனது ஆட்டத்தை மேம்படுத்துவதும் எனக்கு உற்சாகமாக இருந்தது, எனவே நான் உடனடியாக ஒப்புக்கொண்டேன்’ என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு வெளியே உள்ள அணிகளுடன் தொழில்முறை லீக்குகளில் நதியா பங்கேற்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு கர்நாடகா பெண்கள் லீக், டெல்லி மகளிர் லீக் ஆகியவற்றிலும் விளையாடியுள்ளார். அவர் 2016 இல் இந்திய மகளிர் லீக்கில் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் அணியிலும் பங்கேற்றுள்ளார்.
நதியா 2007ஆம் ஆண்டில் கால்பந்து விளையாடத் தொடங்கினார் மற்றும் ஜம்மு-காஷ்மீர் அணிக்காக சப் – ஜூனியர் மற்றும் 19வயதுக்கு குறைந்த அணிகளில் விளையாடியுள்ளார். பின்னர், 2015, 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீர் சீனியர் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
ஒரு தொழில்முறை வீராங்கனை என்பதைத் தவிர, நதியா 2014முதல் தொழில்முறை பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார். 2015 முதல் நதியா பயிற்சியாளர் மற்றும் வீராங்கனை ஆகிய வகிபாங்கள் ஊடாக தனது தார்மீக கடமைகளை ஆற்றி வருகிறார்.
ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு தொழில்முறை குழுக்களுடன் பணிபுரிவதைத் தவிர, நதியா ஜேஜே7 என்ற பெயரில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான தனது சொந்த அகாடமியையும் நடத்தி வருகிறார்.
ஜம்மு-காஷ்மீர் பெண்கள் கால்பந்து துறையில் பின்தங்கி உள்ளனர். அவர்களை ஏனைய இடங்களின் நிலைக்கு கொண்டு வர, நிறைய உழைக்க வேண்டியுள்ளது. அவர்கள் மத்தியில் இந்த விளையாட்டை பிரபல்யப்படுத்து அனைவரும் பங்களித்து உயர்த்த வேண்டும்’ என்று தனது எதிர்பார்ப்பினைக் குறிப்பிட்டுள்ளார்.