தனது வீடு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளமையினால் நாட்டில் மேலும் பாதுகாப்பு இல்லாத நிலையில் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில், தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஆராய்ந்து இந்த நாட்டில் பாதுகாப்பாக வாழ அனுமதிக்குமாறு இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி கோட்டா கோ கம போராட்டக்களத்தில் கட்சி சார்பற்ற அமைதியான போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியதை தாம் பிழையாகக் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தான் ஒரு கொசுவுக்குகூட தீங்கிழைக்காத மனிதர் என்றும் எனினும் தன்னால் இந்த நாட்டில் பாதுகாப்பாக வாழமுடியவில்லை என்றும் தெரிவித்த அவர், எனவே, அண்டை நாட்டு பிரதமரிடம் தன்னை பாதுகாக்குமாறு கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மே 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களால் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.
இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டு நாடாளுமன்றம் பிரவேசித்த முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவின் வீடும் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு எதிராகவே நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.