மக்களிடம் இரண்டுவேளை மட்டும் சாப்பிட பழகிக்கொள்ளுங்கள் எனக் கூறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்த நெருக்கடியை உருவாக்கியவர் யார் என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த மாட்டார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
நெருக்கடியை உருவாக்கியவர்களை ரணில் விக்ரமசிங்க மறைத்து வருவதாகவும் இரண்டு வேளை சாப்பிட பழகிக்கொள்ளுங்கள் எனக் கூற ஒரு பிரதமர் தேவையா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
அநுர திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில், ‘இளைஞர்கள் ராஜபக்ஷக்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தார்கள். மஹிந்த ஒரு திருடன், தங்கள் எதிர்காலம் பாழானது, எனவே, மஹிந்தவை வீட்டிற்கு செல்ல வேண்டும் என கூறினார்கள்.
இவ்வாறு ராஜபக்ஷக்கள் சிக்கிய பின்னர் ரணில் ராஜபக்ஷக்களை காப்பாற்ற பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார். பிரதமர் பதவிக்கு துரோகம் செய்து மறைந்திருந்த ராஜபக்ஷக்களை வெளியில் வர ரணில் அனுமதித்தார்.
இப்போது பழைய தோல்வியடைந்த அரசியல்-பொருளாதாரப் பயணம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பயணம் மிகக் குறுகியதாக இருக்க வேண்டும். ரணில் இன்றைக்கு நெருக்கடி நிலையின் பேச்சாளராக மாறி, இனிமேல் ஒரு நேரம்தான் சாப்பிட வேண்டும் என்கிறார். இன்னும் ஒரு வாரத்திற்குதான் எண்ணெய் இருக்கிறது என்கிறார்.
எரிவாயு மற்றும் எண்ணெய்க்காக மக்கள் வரிசையில் நிற்கின்றனர். பெற்றோர்கள் வரிசையில் நின்று இறக்கின்றனர். சாலைகளில் வாகனங்கள் இல்லை. நெல் வயலை உழுவதற்கு எண்ணெய் இல்லை. மக்களை அழித்த பிறகு இரண்டு வேளை சாப்பிட பழகிக்கொள்ளுங்கள் என்கிறார் ரணில். அதைச் சொல்ல ஒரு பிரதமர் தேவையா?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.















