ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சியின் மகன் மற்றும் மருமகள் ஆகியோர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சியின் மகனான தங்காலை முன்னாள் நகர முதல்வர் ரவிந்து வெதாராச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோர் பாதுகாப்பற்ற முறையில் கெப்ரக வாகனத்தின் பிற்பகுதியில் குளிர்சாதனபெட்டியை ஏற்றி தெற்கு அதிவேக வீதியில் பயணிப்பதற்கு முயற்சித்திருந்தனர்.
இதனை அவதானித்த போக்குவரத்து பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தியதை அடுத்து, சந்தேகநபர்கள் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
இதுதொடர்பான காணொளியும் சமூக ஊடகங்களில் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அதிவேக வீதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் குறித்த சந்தேகநபர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியும் கோரப்பட்டிருந்தது.
இந்தநிலையில், குறித்த சந்தேகநபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், சந்தேகநபருக்கு தங்குமிடத்தை வழங்கிய மாத்தறை – பதலவத்தை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.