இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்க சர்வதேச நாடுகள் தயாராகவள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று நாட்டின் பொருளாதார நிலவரம் தொடர்பாக விசேட உரையொன்றை ஆற்றிய அவர், ”2020 முதல் 2022, மே 20 ஆம் திகதிவரை 2.5 ரில்லியன் ரூபாய் நாட்டில் அச்சடிக்கப்பட்டுள்ளது.
நாம் இன்று கடுமையான நிலைமைக்கு முகம் கொடுத்து வருகிறோம். இதுபோன்றதொரு நிலைமைக்கு நாடு என்றும் முகம் கொடுத்ததில்லை.
சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் இப்போது பேச்சு நடத்தி வருகிறோம். 2023 ஆம் ஆண்டு நாம் பல சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடும்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மாறினாலும், நாம் எமது நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த ஸ்தீரமான கொள்கையுடன் பயணிக்க வேண்டும்.
சர்வதேசத்தின் ஒத்துழைப்பையும் இதற்காக பெற்றுக் கொள்ள வேண்டும்.
சில பிழையான நடவடிக்கைகளினால் இன்று எமது நாடு சர்வதேச மட்டத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஐ.நா. சபை, உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள், சர்வதேச நாடுகளுடன் நாம் பேச்சு நடத்தியுள்ளோம். எமக்குத் தேவையான உதவிகளை பெற்றுக் கொடுப்பதாக அவர்கள் உறுதியளித்துள்ளார்கள்.
எமக்கு கடன் மற்றும் நிதியுதவிகளை செய்யும் நாடுகளில் இந்தியா- சீனா- ஜப்பான் போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன.
இந்த நாடுகளுடனான உறவை இன்னமும் பலப்படுத்த வேண்டும்.
சிங்கப்பூர்- டுபாய் போன்று வர்த்தக மையமாக எமது நாட்டையும் முன்னேற்ற வழிகள் உள்ளன. இதற்காக வியட்நாம் எமக்கு சிறந்த முன்னுதாரணமாக காணப்படுகின்றது.
இலங்கைக்கு புதிய பொருளாதாரக் கொள்கை வகுப்பதே தற்போதைய சூழ்நிலையில் அத்தியாவசியமாகக் காணப்படுகிறது”- எனத் தெரிவித்தார்.