போராட்டங்களை மேற்கொண்டு பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் காண முடியாது என்று ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான ரோகித அபேகுணவர்த்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,” நாம் இன்று கடுமையான நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருகிறோம். நாடாளுமன்றின் ஊடாக இவற்றுக்கெல்லாம் தீர்வொன்று கிடைக்குமா என மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
எரிபொருள் பிரச்சினை, எரிவாயு பிரச்சினை- டொலர் பிரச்சினை என நாட்டில் பல பொருளாதாரப் பிரச்சினைகள் காணப்படுகின்றன.
பொருளாதாரப் பிரச்சினையுடன் அரசியல் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. இதனால், நாடாளுமன்றில் உள்ள 3- 1 பங்கு உறுப்பினர்களுக்கு வீடுகள் கிடையாது.
பிறப்புச் சான்றிதழ்கூட அழிவடைந்துவிட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளன.
இவ்வாறே விலை உயர்ந்துக் கொண்டுசென்றால், இது எங்கே சென்று முடியும்? இந்தப் பிரச்சினைக்கு ஓர் இரவில் தீர்வினைக் காண முடியாது. இப்படியே சென்றால் மக்களால் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும்.
போராட்டங்களை நடத்தி என்ன பலன் கிடைத்தது? இதனால் நாட்டுக்கு எரிபொருள் வந்தால்- எரிவாயு வந்தால், மின்சாரப் பிரச்சினைக்குத் தீர்வுக்கிடைத்தால் நாமும் ஒத்துழைப்பினை வழங்குவோம்.
டொலர் பிரச்சினை நாட்டில் இருக்கும்போது, வன்முறைச்சம்பவங்களை நடத்தி வீடுகளை தீ வைத்துள்ளமையால், மீண்டும் நாட்டில் செலவு ஏற்பட்டுள்ளது.
50 ரூபாய்க்கு சீமெந்து வாங்கி கட்டிய ஒரு வீட்டை, இன்று 3000 ரூபாய்க்கு சீமெந்து வாங்கி புனரமைக்க வேண்டியுள்ளது. சுற்றுலாத்துறையும் இன்று முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. இவை தொடர்பாக அனைவரும் சிந்திக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.