தனது அறிக்கைகளின் உண்மைத்தன்மையை சரிபார்த்து தெளிவுபடுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நாடாளுமன்றத்தில் கருத்து மோதல் இடம்பெற்றது.
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதிய கடிதத்திலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தனது நாடாளுமன்ற உரை தொடர்பான பிழையான புரிதல் காரணமாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என இரா.சாணக்கியன் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அமரகீர்த்தி அத்துகோரளவுக்கான இரங்கல் விவாதத்தின் போது, நாட்டுக்கு பாதகமான விடயங்களுக்கு ஆதரவாக வாக்களித்தமையினாலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாக சாணக்கியன் தெரிவித்த கருத்துக்கு பிரதமர் கண்டனம் தெரிவித்தார்.
ஆகவே நாடாளுமன்ற உறுப்பினர் தனது கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும் என்று கூறிய பிரதமர், இந்த கருத்துக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
எவ்வாறாயினும், பின்னர் பநாடாளுமன்றத்தில் உரையாற்றிய சாணக்கியன், பிரதமர் சபைக்கு தவறான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.