இலங்கைக்கு நேற்றைய தினம் வந்த எரிவாயுவை வைத்தியசாலைகள், ஹோட்டல்கள் மற்றும் தகனசாலைகளுக்கு வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
3,500 மெற்றிக் தொன் எரிவாயுவை விடுவிப்பதற்கான கட்டணம் நேற்று செலுத்தப்பட்டு தற்போது இறக்கும் பணிகள் இடம்பெறுவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் எரிவாயு மற்றும் எரிபொருளை நான்கு மாதங்களுக்கு தொடர்ந்து வழங்குவதற்கு போதுமான அளவு இறக்குமதி இடம்பெறும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள தேவையில் குறைந்தது 50 வீதமாவது பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே எரிவாயு மற்றும் எரிபொருளின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றாலும் அதற்கு 14 நாட்கள் எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தடையின்றி எரிபொருளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், அதிலும் மின் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தற்போது ஏழு நாட்களுக்கு போதுமான எரிபொருள் தங்களிடம் உள்ளதாக தெரிவித்த பிரதமர், நாளை 40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு கப்பலொன்று இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவித்தார்.
ஒரு பெற்றோல் மற்றும் டீசல் எரிபொருள் தாங்கிகள் நாட்டிற்கு வரும் என்றும், அவை இந்த மாத இறுதி வரை போதுமானதாக இருக்கும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.