தற்போதுள்ள எரிபொருள் இருப்புக்களை திட்டமிட்ட முறையில் விநியோகிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நிலவும் எரிபொருள் தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அரச செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வது தொடர்பாக தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடல் கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (வெள்ளிக்கிழமை) பகல் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் நிதி, பொதுநிர்வாக மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர்கள், மத்திய வங்கியின் ஆளுநர், அதிகாரிகள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தற்போது கிடைக்கப்பெறும் மற்றும் எதிர்வரும் சில தினங்களில் பெற்றுக்கொள்ளப்படும் எரிபொருள்களை முறையாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
போதுமான எரிபொருள் இருப்புக்களை ஒழுங்குபடுத்துவதற்கு வசதியாக அரச மற்றும் தனியார் வங்கிகளுடன் இணைந்து கடன் பத்திரங்களை வழங்குவதற்கு நிதி அமைச்சும் மத்திய வங்கியும் திட்டமிட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.