பண்டோரா ஆவணங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் அத்தகைய வங்கிக் கணக்குகளில் உள்ள நிதியை அரசாங்கம் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அவ்வாறு கடல்கடந்த கணக்குகளில் உள்ள நிதியை கைப்பற்றி இலங்கையின் தற்போதைய நிலையை மாற்றுவதற்கு ஏன் பயன்படுத்த முடியாது என்றும் கேள்வியெழுப்பினார்.
அத்தோடு மாளிகைகளில் இருப்பவர்களுக்கு எரிபொருள், எரிவாயு, உணவு மற்றும் டொலர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதில்லை என்றும் அவர் விசனம் வெளியிட்டார்.
நாட்டில் இல்லாத விடயங்களை ஜனாதிபதியும் பிரதமரும் நாளாந்தம் அறிவித்து வருவதாகவும் இவ்வாறு அறிவிப்பதன் நோக்கம் என்ன என்றும் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
பொதுமக்கள் பாரிய அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், தமது இயலாமையை வெளிப்படுத்துவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை விவசாயத் துறையை சீரழித்த அரசாங்கம் இன்று விவசாயத்தை அபிவிருத்தி செய்ய பங்களிக்குமாறு பொது மக்களைக் கோருகின்றது என்றும் குற்றம் சாட்டினார்.