எரிபொருள் நெருக்கடி காரணமாக மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக எரிபொருள் நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் உட்பட வைத்தியசாலை ஊழியர்கள் பணிக்குத் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அபேக்ஷா வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் கனிஷ்க டி சில்வா தெரிவித்துள்ளார்.
வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாவிட்டால் எதிர்காலத்தில் வைத்தியசாலை செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்குமாறு கோரி கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அபேக்ஷா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எனினும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடிதத்தை சமர்ப்பித்து எரிபொருளை பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் அவசர சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் டொக்டர் குமார விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் அவசர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வைத்தியர்கள் உள்ளிட்ட வைத்தியசாலை ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்குமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.