பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இமானுவல் மக்ரோன் தலைமையிலான மத்திய-இடதுசாரி கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றினாலும் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது.
பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் முடிவுகள் நேற்று (திங்கட்கிழமை) வெளியாகின.
577 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி இமானுவல் மக்ரானின் மத்திய- இடதுசாரி கூட்டணி அதிகபட்சமாக 245 இடங்களைக் கைப்பற்றியது. இருப்பினும், தனிப்பெரும்பான்மை அந்தக் கூட்டணிக்கு கிடைக்கவில்லை. தனிப்பெரும்பான்மையைப் பெறுவதற்கு அந்தக் கட்சிக்கு இன்னும் 44 இடங்கள் தேவை.
ஜீன்-லுக் மெலன்சன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி 131 இடங்களைக் கைப்பற்றி நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.
மரீன் லெபென் தலைமையிலான வலதுசாரி கூட்டணிக்கு இத்தேர்தலில் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. கடந்த தேர்தலில் வெறும் 8 இடங்களில் வெற்றி பெற்றிருந்த அந்தக் கூட்டணி இந்த முறை 89 இடங்களைக் கைப்பற்றியது.
நாடாளுமன்றத்தில் மக்ரான் தலைமையிலான கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காததால், வரிக் குறைப்பு, ஓய்வு வயதை 62-இலிருந்து 65-ஆக அதிகரிப்பது உள்ளிட்ட அரசின் கொள்கை முடிவுகளை எளிதில் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதிக்கான தேர்தலில், கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 58.5 சதவீத வாக்குகளைப் பெற்று மக்ரோன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், முந்தைய தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடுகையில் மக்ரோனுக்கு வாக்கு சதவீதம் குறைந்திருந்தது. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் அவருக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.