ரஷ்யா தமது நட்பு நாடான பெலரஸூக்கு அணுசக்தி திறன் கொண்ட குறுகிய தூர ஏவுகணை அமைப்புக்களை அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது.
செயின்ட் பீட்டர்ஸ்பார்க்கில் கருத்து தெரிவித்த போதே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
500 கிலோமீற்றர் வரம்பை கொண்ட குறித்த அணுசக்தி அமைப்புகள் எதிர்வரும் மாதங்களில் அங்கு அனுப்பப்படும் என அவர் கூறியுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை ஆரம்பித்ததில் இருந்து பெலரஸ் உத்தியோகப்பூர்வ போரில் ஈடுபடவில்லை.
எனினும் ரஷ்யாவுக்கான உதவிகளை பெலரஸ் தொடர்ந்தும் வழங்கிவருகிற நிலையில் பெலரஸ் பகுதியிலிருந்து உக்ரைன் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
உக்ரைனின் முக்கிய நகரான செவெரோடொனெட்ஸ்க் பகுதியில் இருந்து பின்வாங்கப் போவதாக உக்ரைன் அறிவித்துள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சுமார் 20 ஏவுகனை தாக்குதல்கள் இவ்வாறு நடத்தப்பட்டுள்ள போதும் சேத விபரங்கள் இதுவரையில் வெளிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.