அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் இல்லை என்றால் புதிய அரசை மக்கள் தெரிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதத்தின் மூலம் வலியறுத்தியுள்ளனர்.
பொது மக்களின் நலனுக்காக அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒன்றிணை வேண்டும் என்றும் அதற்கு ஜனாதிபதி மற்றும் அனைத்து கட்சித் தலைவர்களும் உடன்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
10 அம்சங்கள் அடங்கிய கடிதத்தில், அனைத்துக் கட்சி அரசாங்கத்தின் தலைவராக ஒரு தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கட்சி சார்பற்ற இலங்கையர் ஒருவர் தேசிய பட்டியலிலிருந்து நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அனைத்துக் கட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை 15 உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட எவரையும் சேர்க்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
பொருத்தமான மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள் அந்தந்த அமைச்சுக்களுக்கு நியமிக்கப்பட வேண்டும் என்றும் அனைத்துக் கட்சி அரசாங்கத்திற்கு வழிகாட்டவும் ஆலோசனை வழங்கவும் தேசிய சபை நியமிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தவறான நிர்வாகத்தின் மூலம் நாட்டை அராஜகத்திற்கு இட்டுச் செல்வதற்குப் பதிலாக, நட்பு நாடுகளிடமிருந்து உதவிகளைப் பெறுவதற்கு முறையான பொறிமுறையைத் தயாரிக்க வேண்டும் என்றும் மகாநாயக்க தேரர்கள் வலியறுத்தியுள்ளனர்.