ஜூலை மாதத்தின் பின் நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்று ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட சில நாட்களில் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.அவர் கூறியது இப்பொழுது நடக்கின்றது. இதன் பொருள் அவர் ஒரு தீர்க்கதரிசி என்பதல்ல. அல்லது ஐலண்ட் பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் எழுதியது போல மெய்யாகவே அவர் ஞானக்காவின் மச்சான் என்பதுமல்ல.மாறாக அரசியல் பொருளாதாரத்தை ஓர் அறிவியல் ஒழுக்கமாக அணுகும் எவருக்கும் அது மிகத் தெளிவாகவே தெரியும்.எப்பொழுது நெருக்கடி வரும்? எப்படிப்பட்ட நெருக்கடி வரும்? என்பது.அதைத்தான் ரணில் விக்கிரமசிங்க வெளிப்படையாக தெரிவித்தார். ஆனால் அவ்வாறு சாத்திரம் கூறுவது மட்டும் அவருடைய வேலை அல்ல. அதற்கும் அப்பால் மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும். பசியை, நோயை, மரணபயத்தை, காயங்களை, நிச்சயமின்மைகளை, எல்லாவற்றையும் ஒரு மக்கள்கூட்டம் வெல்வதற்கு அவர்கள் ஏதாவது ஒன்றில் நம்பிக்கை வைக்க வேண்டும், அந்த நம்பிக்கையை அரசியல் தலைமைதான் கொடுக்க முடியும்.ஆனால் அப்படிப்பட்ட தலைமைகள் எவையும் நாட்டில் இல்லை.
ரணில் விக்கிரமசிங்க அப்படிப்பட்ட ஒரு தலைவராகப் பார்க்கப்படவில்லை என்பதினால்தான் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். இப்பொழுது ஆலையில்லா ஊருக்கு இலுப்பம்பூச் சக்கரையாக அவரை நியமித்திருக்கிறார்கள்.அந்த நியமனம் கூட ராஜபக்சக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான ஒரு நியமனம் தான்.அரசியல்வாதிகளின் வீடுகளை எரித்த ஆர்ப்பாட்டக்காரர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு தான் அவர் நியமிக்கப்பட்டார்.அவர் பிரதமராக வந்த கையோடு அவர் கூறியது போல இப்பொழுது நிலைமை பாரதூரமானதாக மாறி வருகிறது. இன்னும் சரியாகச் சொன்னால், அவருக்கு முன்பு இருந்ததை விடவும் நிலைமை இப்பொழுதுதான் தாங்க முடியாத ஒரு வளர்ச்சிக்கு போய்க்கொண்டிருக்கிறது. ஒரு சமூகமுடக்கம் என்று கூறப்படும் அளவுக்கு தெருக்களில் வாகனங்களின் நடமாட்டம் குறைந்து விட்டது. எரிபொருள் இல்லை என்றால் வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும். மின்வெட்டு அதிகரித்து இரவுகள் இருண்டவைகளாக மாறிவிடும்.
“இதோ கப்பல் வருகிறது. இல்லை வராது. கப்பல் எதிர்பார்க்கப்பட்டதை விடப் பிந்தி வரும்….பத்தாம் தேதி வரையிலும் எரிபொருள் கிடையாது….22ஆம் தேதி வரையிலும் எரிபொருள் கிடையாது”….. என்றெல்லாம் மாறி மாறி வரும் குழப்பமான அறிவிப்புக்கள் யாவும் பதுக்கல் வியாபாரிகளுக்கும் கள்ளச் சந்தை வியாபாரிகளுக்கும்தான் லாபமாக முடிகின்றன. நாளுக்கு நாள் டீசல் மற்றும் பெட்ரோலின் விலைகள் கள்ளச் சந்தையில் அதிகரித்துக் கொண்டே போகின்றன.
தமிழ் மக்களின் சேமிப்பு பண்பாடு என்பது அதன் மிகச்சுயநலமான வடிவத்தில் வெளிப்பட்ட ஒரு காலகட்டம் இதுவெல்லாம்.அவரவர் தத்தமது நோக்கு நிலையில் இருந்து எரிபொருளை சேமிக்கிறார்கள்.எரிபொருளைச் சேமிப்பதில் முழு நாடுமே தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இதனால் எரிபொருள் சமமாகப் பகிரப்படாமல் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியினரிடம் அதிக அளவில் தேங்கி நிற்கின்றது. இந்த விடயத்தில் சேமிப்புப் பண்பாட்டையும், பதுக்கல் வியாபாரிகளையும், கள்ளச் சந்தை வியாபாரிகளையும் மட்டும் குறை கூற முடியாது.எரிபொருள் விநியோகத்தை புத்திசாலித்தனமாக ஒரு கணிதமாக நடைமுறைப்படுத்த அதிகாரிகளால் முடியவில்லை. தமிழ் நிர்வாக அதிகாரிகள் தமது இயலாமைகளை அதிகம் வெளிப்படுத்திய ஒரு காலகட்டம் இதுவெனலாம்.அரசியலதிகாரம்தான் நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறது.அரசியல் தலைமைத்துவம் முடிவெடுக்க முடியாத ஒரு நிலையில் நிர்வாகிகளும் குழம்பத் தொடங்கிவிடுவார்கள்.அதுதான் இப்பொழுது நாட்டில் நடக்கின்றது.
எனவே எல்லாமே குழம்பிப்போய் விட்டன.மகாநாயக்கர்கள் கூறுகிறார்கள்…..பொருளாதார நெருக்கடிகளைக் கையாளும் விடயத்தில் இலங்கைத்தீவு தோல்வியடைந்துவிட்டது என்று. அரசாங்கம் தோல்வி அடைந்துவிட்டது. எதிர்க்கட்சிகள் தோல்வியடைந்து விட்டன. அரசு நிர்வாகம் தோல்வியடைந்து விட்டது.இலங்கைத்தீவின் அரச மதமாகிய தேரவாத பௌத்தமும் நடைமுறையில் தோல்வியடைந்துவிட்டது. அதாவது மகாநாயக்கர்களும் தோல்வி அடைந்து விட்டார்கள்.
எனவே ரணில் விக்கிரமசிங்க எச்சரித்ததைப் போலவே இந்த நெருக்கடி அடுத்த கட்டமாக உணவு நெருக்கடியாக அதன் உச்சகட்ட வளர்ச்சியை அடையலாம். எனது கட்டுரைகளில் நான் ஏற்கனவே குறிப்பிட்டிருப்பதுபோல, நடுத்தர வர்க்கத்தாலும் நுகர முடியாத அளவுக்கு அரிசியின் விலை அதிகரிக்கலாம். இவ்வாறான ஒரு பாரதூரமான பின்னணியில்,உணவு நெருக்கடி அதிகரித்தால், அதாவது மக்கள் உணவுப் பொருட்களுக்காக வரிசைகளில் நிற்கும் ஒரு நிலைமை வந்தால் அதைச் சமாளிப்பது கடினமாக இருக்கும்.
ஏற்கனவே சிங்களப் பகுதிகளில் பொதுச்சமையற் கூடங்கள் இயங்கத் தொடங்கிவிட்டன.யாழ் பல்கலைக்கழகத்தில் பொதுச் சமையற் கூடங்கள் இயங்கத் தொடங்கிவிட்டன. கிழக்கில் முஸ்லிம் கிராமங்களில் வீட்டுக்கு ஒரு பார்சல் என்ற சமூகச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதாவது தானமாகத் தரப்படும் உணவில் தங்கியிருக்கும் மக்களின் தொகை அதிகரித்து வருகிறது என்று பொருள். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து ஒரு பகுதியினர் வீட்டுத் தோட்டங்களில் இறங்கி விட்டார்கள். இன்னொரு பகுதியினர் ஏற்கனவே சேமிக்கத் தொடங்கி விட்டார்கள்.
அரசாங்கம் யாரிடம் எல்லாம் கையேந்தலாமோ அவர்களிடமெல்லாம் கையேந்தத் தொடங்கிவிட்டது.எடுக்கிற பிச்சை நெருக்கடியை எவ்வளவு தூரத்துக்குத் தடுக்கும்?
நான் ஏற்கனவே சொன்னேன் என்று கூறிவிட்டு ரணில் விக்கிரமசிங்க தன் பொறுப்பில் இருந்து தப்பி விட முடியாது. சிங்கள மக்களுக்கு ராஜபக்சக்களின் மீது காணப்படும் அடங்காத கோபம் ரணிலின் மீது திரும்புவதற்கு அதிக காலம் எடுக்காது.தொழிற்சங்கங்கள் மறுபடியும் ஆர்ப்பாட்டங்களைத் தொடங்கி இருக்கின்றன. ஜேவிபி,சஜித் அணி போன்றனவும் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குபடுத்தத் தொடங்கியுள்ளன.
ரணிலின் வருகையால் காலிமுகத்துடலில் போராட்டங்கள் சோர்ந்து போனதான ஒரு தோற்றம் ஏற்பட்டது. எரிபொருள் நெருக்கடி காரணமாக மக்கள் அதிகரித்த அளவில் எரிபொருள் வரிசைகளில் நிற்பதனாலும், தூர இடங்களில் இருந்து காலிமுகத்திடலுக்கு வருவதற்கு அதிக தொகை பணம் தேவைப்படுவதனாலும்,காலிமுகத்திடலில் திரள்வோரின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக அங்கு இருப்பவர்கள் கூறுகிறார்கள். அதாவது போராட நேரமில்லாதபடி அன்றாட வாழ்வில் நெருக்கடிகள் அதிகரித்துவிட்டன என்று பொருள். ஆனால் அந்த நெருக்கடிகள் தீர்வதற்கு போராட்டத்தைத்தவிர வேறு வழியில்லை,இனிப் போராட்டம்தான் வாழ்க்கை என்ற ஒரு நிலைமை ஏற்படுவதற்கு இன்னும் எவ்வளவு காலம் உண்டு.
அப்படி ஒரு பரவலான எதிர்ப்பு மீண்டும் எழுமாக இருந்தால் அரசியல் ஸ்திரத்தன்மை மேலும் பாதிப்படையும். இதில் கோத்தா+ரணில் அரசாங்கத்துக்குள்ள ஒரே நிம்மதியான விஷயம், எதிர்க்கட்சிகள் மத்தியில் ஐக்கியம் இல்லை என்பதும்,அவை எல்லாவற்றையும் ஒன்றிணைத்து போராடத்தக்க தலைமைகள் அவர்கள் மத்தியில் இல்லை என்பதும்தான்.
இது ஏற்கனவே காணப்பட்ட ஒன்றுதான்.கடந்த சில மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு எதிர்கட்சிகள் முழு உரிமை கோர முடியாது. காலிமுகத்திடலிலும் ஏனைய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் செய்யும் கட்சிசாரா மற்றும் கட்சிசார் மக்கள்தான் அந்த மாற்றங்களை ஏற்படுத்தினார்கள்.அந்தப் போராட்டங்களின் பின்னணியில் நிற்கும் முன்னிலை சோசலிச கட்சி,ஜேவிபியின் மாணவர் அமைப்பு,சம்பிக்க ரணவக்கவின் 43-வது பிரிகேட் உட்பட இந்தப் போராட்டங்களை பின் மறைவிலிருந்து ஒழுங்கமைக்கும் அமைப்புகள்தான் இந்த மாற்றங்களை ஏற்படுத்தின.ஆனால் இங்குள்ள பாரதூரமான வெற்றிடம் என்னவென்றால், அந்த அமைப்புகள் மத்தியிலும் கூட ஐக்கியம் இல்லை. கோத்தாவுக்கு எதிராக என்ற ஒரு விடயத்தில்தான் அவர்கள் ஐக்கியமாகக் காணப்படுகிறார்கள். அதற்குமப்பால் சித்தாந்த அடித்தளத்தின் மீது நிறுவனமயப்பட்ட மையக் கட்டமைப்போ, மையத் தலைமையோ அங்கே கிடையாது.
எனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால் அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தி அலைகளையும் கோப அலைகளையும் ஒன்றிணைத்து அரசியல் ஆக்க சக்தியாக மாற்றி அடுத்த கட்ட தலைமைத்துவம் ஒன்றைக் கட்டியெழுப்ப எதிர்க்கட்சிகளாலும் முடியாதிருக்கிறது, கட்சி சாராது போராடும் ஏனைய தரப்புகளாலும் முடியாதிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதியிலிருந்து இன்றுவரையிலும் அவர்கள் ஏற்படுத்திய மாற்றங்களை அடுத்தடுத்த கட்டத்துக்கு அரசியல் ஆக்கசக்தியாகத் திரட்டியெடுக்க எதிர்க்கட்சிகளாலும் முடியாதுள்ளது,கட்சி சார்பின்றி போராடும் அணிகளாலும் முடியாதுள்ளது. அதாவது தலைமைத்துவ வெற்றிடம் ஒன்று தொடர்ந்தும் காணப்படுகிறது.
இந்த வெற்றிடந்தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கியது. இந்த வெற்றிடந்தான் அவரை தவிர்க்கப்பட முடியாத ஒரு தெரிவாக ராஜபக்சக்கள் முன்நிறுத்தக் காரணம். இந்த வெற்றிடந்தான் போராட்டத்தின் கனிகளை ரணில் விக்கிரமசிங்க சுவீகரித்துக் கொள்ளவும் காரணம். இந்த வெற்றிடத்தின் விளைவாகத்தான் கோத்தாபய தொடர்ந்தும் துணிச்சலாக கதிரையில் ஒட்டிக்கொண்டிருக்கிறார்.
எனவே இப்பொழுது எதிர்க்கட்சிகளும் கட்சி சார்பின்றி காலிமுகத்திடலிலும் திடலிலும் ஏனைய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் செய்பவர்களும் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வர வேண்டும்.மக்களின் கூட்டுக்கோபத்துக்குத் தலைமை தாங்க வேண்டும்.மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் புதிய தலைமைகளைக் கட்டியெழுப்ப வேண்டும்.
இது நவீன அரசியல்.இதில் அதிசயங்கள் அற்புதங்களுக்கு இடமில்லை. மீட்பர்கள் திடீரென்று வானத்தைக் கிழித்துக்கொண்டு பூமியில் குதிக்கப் போவதில்லை.சிங்களமக்களின் கூட்டுக்கோபத்தை அரசியல் ஆக்கசக்தியாக மாற்றக்கூடிய பொருத்தமான தலைமைகள் துணிச்சலாக முன்வராதவரை ரணில் விக்ரமசிங்கவின் வெறுங்கையை பார்த்துக் கொண்டிருப்பதை தவிர வேறு வழியில்லை.