இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இடையேயான நான்காவது வெளியுறவு அமைச்சக ஆலோசனைகள் புதுடில்லியிலவ் நடைபெற்றது.
இதில் இரு நாடுகளும் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து இருதரப்பு உறவுகளையும் மதிப்பாய்வு செய்தன.
அத்தோடு, பிராந்திய மற்றும் பலதரப்பு மன்றங்களில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்திய தூதுக்குழுவிற்கு வெளிவிவகாரத்துறையின் கிழக்குப் பிரிவின் தலைவர் சவுரப் குமார் தலைமை தாங்கினார்.
நியூசிலாந்து தரப்பில் வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் அமெரிக்க மற்றும் ஆசியா குழுமத்தின் துணை செயலாளர் மார்க் சின்க்ளேர் தலைமை தாங்கினார்.
இந்தச் சந்திப்பு குறித்து, வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், ‘வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, மக்களிடையேயான உறவுகள், பயங்கரவாத எதிர்ப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் ஆயுதக் குறைப்பு உள்ளிட்ட தற்போதைய நட்புரீதியான இருதரப்பு உறவுகளை மதிப்பாய்வு செய்யப்பட்டன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு அப்பால் இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு துறைகளில் ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்தவும், உறவுகளை ஆழப்படுத்தவும் இரு தரப்பினரும் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.
மேலும், பிராந்தியத்தில் நெருக்கமான ஒத்துழைப்பின் அவசியத்தை எடுத்துரைத்து, இருதரப்பினரும் சுதந்திரமான, திறந்த, நிலையான இந்தோ-பசுபிக்கின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.
பிராந்திய மற்றும் பலதரப்பு மன்றங்களில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விவாதங்கள் நடைபெற்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.