சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. எஸ்.ஜெய்சங்கரைப் பாராட்டியுள்ளார்.
பீஜிங்கிற்கான இந்தியாவின் புதிய தூதுவர் பிரதீப் குமார் ராவத் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் தியோயுடாய் மாநில விருந்தினர் மாளிகையில் சீன வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்திருந்தார்.
அதன்போதே, சீன வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன், சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொதுவான நலன்கள் அவற்றின் வேறுபாடுகளை விட அதிகமாக உள்ளன என்றும் வாங் யீ கூறியுள்ளார்.
‘உலகளாவிய ரீதியில் பல்வேறு சவால்களைச் சமாளிக்கவும், சீனா, இந்தியா மற்றும் வளரும் நாடுகளின் பொதுவான நலன்களைப் பாதுகாக்கவும் இரு தரப்பினரும் (இந்தியா மற்றும் சீனா) இணைந்து செயல்பட வேண்டும்.
வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், சமீபத்தில், ஐரோப்பிய மத்தியத்துவம் மற்றும் சீன – இந்திய உறவுகளில் வெளிச்சக்திகள் தலையிடுவது குறித்த ஆட்சேபனை ஆகியவற்றை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.
இது இந்தியாவின் சுதந்திர பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார். இதனை வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையும் உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன், வாங் யீ, ‘சீன – இந்தியா உறவுகளில் சுமூகமான நிலைமைகளை தக்கவைக்கப்பதற்கு இரு தரப்பினரும் ஒரே திசையில் செயல்பட வேண்டும், மேலும் நிலையான மற்றும் நல்ல வளர்ச்சியின் பாதையில் இருநாடுகளையும் மீண்டும் கொண்டு வர வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், ராவத்துடனான தனது சந்திப்பின் போது வாங் யீ, சீன – இந்திய உறவுகள் குறித்து ‘நான்கு முனை விடாமுயற்சி’களையும் முன்வைத்தார்.
முக்கியமாக, இரு நாடுகளின் தலைவர்களிடையே எட்டப்பட்ட முக்கியமான மூலோபாய கருத்தொற்றுமையில் விடாமுயற்சி, இருதரப்பு உறவுகளில் எல்லைப் பிரச்சினையை பொருத்தமான இடத்தில் வைப்பதில் விடாமுயற்சி, இருதரப்பு உறவுகளில் நேர்மறை ஆற்றலைத் தொடர்ந்து செலுத்தி, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பைத் தொடர்ந்து விரிவுபடுத்தில் விடாமுயற்சி என்பன முக்கியமகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேநேரம், ஐரோப்பாவில் நடைபெற்ற பிறிஸ்ரிஸ்லாவா மன்ற உரையின்போது, வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், ‘புதுடில்லியும் பீஜிங்கும் தங்கள் இருதரப்பு உறவை தாங்களாகவே நிர்வகிக்க முடியும்’ என்று கூறியிருந்தார்.
உலகம் அதன் ஐரோப்பிய மத்தியத்துவ மனநிலையிலிருந்து வெளிவரவேண்டியது அவசியமாகும்’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், ஜெய்சங்கர் ரஷ்ய – உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாட்யும் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், இந்தியா இழிந்த தன்மை கொண்ட வெளியுறவுக் கொள்கைத்தேர்வுகளை எடுக்காது என்றும் திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
முன்னதாக, மூன்று நாள் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோர் பங்கேற்று உரையாற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.