கொழும்பு நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை முதல் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக இன்றும் நாளையும் பாரியளவிலான ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய மேல் மாகாணத்திற்கு வெளியில் இருந்து சுமார் மூவாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவொன்றை விசேட கடமை அடிப்படையில் கொழும்புக்கு வரவழைப்பதற்கு பொலிஸ் தலைமையகம் ஏற்கனவே ஏற்பாடுகளை செய்துள்ளது.
மேலும், மேல் மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் கொழும்பில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விசேட கடமை அடிப்படையில் வடமே, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்து அழைக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் சார்ஜன்ட் பதவிகளில் உள்ள 600 உத்தியோகத்தர்களும் பொலிஸ் பரிசோதகர் தரத்திலான 24 அதிகாரிகளும் கம்பஹா தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் தெரிவு செய்யப்பட்ட கான்ஸ்டபிள் மற்றும் சார்ஜன்ட் தரத்திலான 800 உத்தியோகத்தர்களும் பொலிஸ் விசேட பிரிவுகளில் கடமையாற்றும் 20 பரிசோதகர் தர உத்தியோகத்தர்களும் தர்மதாச விளையாட்டரங்கு பகுதியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இது தவிர, பொலிஸ் பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த 800 சார்ஜன்ட்கள் மற்றும் கான்ஸ்டபிள்களுடன் 26 இன்ஸ்பெக்டர் தர அதிகாரிகள் மிரிஹான தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உட்ட பகுதிகளில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
தென் மற்றும் ஊவா மாகாணங்களில் இருந்து அழைக்கப்பட்ட அதிகாரிகள் உட்பட 600 பேர் தெஹிவளை பகுதியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இந்த அதிகாரிகளுக்கு மேலதிகமாக உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் சுமார் 50 பேர் கொண்ட குழுவொன்றும் கொழும்பு நகரின் பாதுகாப்பிற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.