முன்னணி சமூகவலைதளமான டுவிட்டர் தளத்தை 44 பில்லியன் டொலர்கள் கொடுத்து வாங்கும் ஒப்பந்தத்தை இரத்து செய்வதாக, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், உலகின் பணக்காரருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் தளத்தில் போலி அல்லது ஸ்பேம் கணக்குகள் பற்றிய தகவல்களை நிறுவனம் வழங்கவில்லை என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.
பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் தாக்கல் செய்ததில், மஸ்கின் வழக்கறிஞர்கள், போலி கணக்குகள் குறித்து சரியான தகவலை டுவிட்டர் நிறுவனம் தரவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், தனது பல்வேறு கேள்விகள், சந்தேகங்களுக்கும் டுவிட்டர் நிர்வாகம் சரியான விளக்கம் அளிக்கவில்லை என்று மஸ்க் புகார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவு செய்ய எலான் மஸ்க் மீது வழக்கு தொடரப்போவதாக டுவிட்டர் நிறுவனமும் அறிவித்துள்ளது.
எலான் மஸ்கிற்கு டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டொலர்கள்; தொகைக்கு விற்பனை செய்ய டுவிட்டர் நிர்வாக குழு ஒப்புதல் அளித்தது. ஆனால் டுவிட்டரில் 20 – 50 சதவீதம் போலி கணக்குகள் இருப்பதாகவும், அதன் கணக்குகளை முடக்க உள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
ஆனால், 5 சதவீதத்திற்கும் குறைவான போலி கணக்குகளே உள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்து வந்தது. இந்நிலையில், டுவிட்டர் சமூக வலைதள நிறுவனத்தை வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தை எலான் மஸ்க் இரத்து செய்துள்ளார்.