அ.தி.மு.க பொருளாளராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக பொதுக் குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, திட்டமிட்டப்படி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.
இரட்டை தலைமையை இரத்து செய்துவிட்டு பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டுவர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கமைய இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்கும் தீர்மானமும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி சென்று கொண்டிருந்த அதே நேரத்தில் பிரசார வாகனத்தில் ஓ.பன்னீர்செல்வம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றிருந்தார்.
இதன்போது இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது.
இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இபிஎஸ் ஆதரவாளர்கள் பின்வாங்கினர்.
இதையடுத்து, பூட்டியிருந்த தலைமை அலுவலகத்தை உடைத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தலைமை அலுவலகத்தை கைப்பற்றினர்.
இதன்காரணமாக கோட்டாட்சியர் அதிமுக தலைமையகத்திற்கு சீல் வைத்தார்.
பரபரப்பான இத்தகைய சூழலுக்கு நடுவே ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானமும் பொதுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
கட்சி நலனுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செயல்பட்டதாக கூறி இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கமைய அதிமுகவின் பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகள் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.