நாடாளுமன்றத்தை நாளை விசேடமாக கூட்டுவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் அடுத்த அமர்வு, எதிர்வரும் 19ஆம் திகதியே இடம்பெற வேண்டும்.
எனினும், கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய நாளை அவசரமாகக் கூட்டத் தீர்மானிக்கப்பட்டது.
எனினும், அவ்வாறு சபையைக் கூட்டவேண்டுமாயின் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவேண்டும்.
அதுவும் 24 மணிநேரத்துக்குள் வெளியிடவேண்டும் எனவும் அறியமுடிகின்றது.
இந்நிலையில், அவசர கட்சித் தலைவர் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை காலை 10 மணிக்கு கட்சி தலைவர் கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது ஜனாதிபதி தெரிவு, பிரதமர் தெரிவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, ஜனாதிபதியும் பிரதமரும் மக்களை ஏமாற்ற முயற்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டத்தை விட இந்த நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம் என அதன் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகாத நிலையில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நகர்வு தொடர்பில் காலிமுகத்திடல் பிரதிநிதிகள் மத்தியில் முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது என்பதுக் குறிப்பிடத்தக்கது.