இத்தாலியில் ஆளும் கட்சிக் கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டதால் பிரதமர் மரியோ ட்ராகி தனது பதவியை நேற்று (வியாழக்கிழமை) இராஜினாமா செய்தார்.
நேற்று (வியாழக்கிழமை) மரியோ ட்ராகி, தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செர்கியோ மாட்டரேலாவிடம் அளித்தார்.
எனினும், நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும்வரை, நாட்டின் பிரதமராக மரியோ ட்ராகி செயற்படுவார்.
இடதுசாரி, வலதுசாரி உள்ளிட்ட முரண்பட்ட கட்சிகளின் ஆதரவுடன் மரியோ ட்ராகி கடந்த 17 மாதங்களாக ஆட்சி செலுத்தி வந்தார்.
எனினும் கூட்டணிக்குள் உட்பூசல் அதிகரித்ததையடுத்து நாடாளுமன்றத்தில் நாட்டின் கூட்டணி அரசாங்கத்தில் மிகப்பெரிய கட்சியான ஃபைவ் ஸ்டார் இயக்கம் நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது ஆதரவை மீள பெற்றது. இதையடுத்து இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
ஆனால், இத்தாலியின் ஜனாதிபதி, செர்ஜியோ மட்டரெல்லா, ட்ராகியின் இராஜினாமாவை நிராகரித்தார். அதற்கு பதிலாக, அரசியல் நிலைமையை மதிப்பிடுவதற்காக ட்ராகியை நாடாளுமன்றத்தில் உரையாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
ட்ராகி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் உள்ள கட்சிகளில் ஒன்றான ஃபைவ் ஸ்டார் இயக்கம், பணவீக்கத்தைக் குறைப்பதற்கும், அதிகரித்து வரும் எரிசக்தி செலவினங்களை எதிர்த்துப் போராடுவதற்கும் ஒரு புதிய ஆணையை முன்பு எதிர்த்தது.
இத்தாலியின் சட்டமியற்றுபவர்கள் பரந்த அளவிலான கொள்கைப் தொகுப்பின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினர். ஆனால் கட்சி ஆதரிக்கவில்லை என்றால் பதவி விலகுவதாக ட்ராகி மிரட்டிய போதிலும் ஃபைவ் ஸ்டார் புறக்கணித்தது.
முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில், பிரதமர் மரியோ டிராகி தனது பதவியை நேற்றுஇராஜினாமா செய்தார்.