அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் தெரிவித்துள்ளார்.
79 வயதாகும் பைடன், கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக போட்டுள்ளார் என்றும், தற்போது தன்னை தனிமைக்கப்படுத்திக் கொண்டுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது அவர் நோய் தீவிரமடைவதைத் தடுப்பதற்காக தீநுண்மி எதிர்ப்பு (ஆன்டிவைரல்) மருந்தான பாக்ஸ்லோவிடை உட்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் தனிமைப்படுத்திக் கொண்டே பணிகளை அவர் கவனிப்பார் என வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தனது புகைப்படத்தை தனது டுவிட்டர் பதிவில் பகிர்ந்த பைடன் ‘நண்பர்களே, நான் சிறப்பாகச் செயல்படுகிறேன். உங்கள் அக்கறைக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பொறுப்பை ஏற்பதற்கு முன்னரே இரு தவணை கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்ட ஜனாதிபதி பைடன், பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஊக்கத் தடுப்பூசியும் கடந்த மார்ச் 30ஆம் திகதி மேலும் ஓர் ஊக்கத் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டது நினைவூகூரத்தக்கது.