ராஜபக்ஷக்களின் வேலைத்திட்டத்தைக் கையில் எடுத்தே போராட்டக்காரர்களை, இராணுவ பலம் கொண்டு புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடக்க முற்படுகிறார் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
மேலும், மக்களால் நிராகரிக்கப்பட்ட நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து பொதுத் தேர்தலொன்றுக்கு செல்லும்வரை மக்கள் போராட்டம் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக பதவியேற்ற நேரத்திலிருந்தே போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார்.
அதன் ஓர் அங்கமாகவே, இன்று காலி முகத்திடல் போராட்டக்காரர்கள், அங்கு செய்தி சேகரிக்க சென்ற தேசிய மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அங்குள்ள நிர்மானங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. இதுவரை 10 பேரளவில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர் காயமடைந்துள்ளார்கள்.
அச்சுறுத்தல்களை மேற்கொண்டு மக்களை கட்டுப்படுத்தவே ரணில் விக்கிரமசிங்கவும், ராஜபக்ஷவினரும் தற்போது முற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அடக்குமுறைகளால் மக்களைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ஷக்களின் ஆதரவுடன் தான் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
எனவே, மக்களுக்கு அன்றி ராஜபக்ஷவினருக்கு விஸ்வாசமாக செயற்பட வேண்டும் என்றே அவர் நினைப்பார்.
ராஜபக்ஷவினரின் வேலைத்திட்டத்தையே அவர் இன்று கையில் எடுத்துள்ளார். அதன் ஓர் அங்கமாகவே இந்த தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
இது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முதலும் கடைசியுமான அடக்குமுறையாக இருக்கும் என நாம் நம்புகிறோம்.
இவருக்கு மக்கள் ஆணைக்கிடையாது. மக்கள் ஆணையின்றி ஜனாதிபதியான இவரை மக்களும் ஜனாதிபதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
மக்கள் எதிர்ப்பை இவர் இன்னமும் புரிந்துக் கொள்ளவில்லை. 5 வருடங்களுக்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதியை 2 வருடங்களிலேயே மக்கள் விரட்டியடித்துள்ளார்கள். இந்த நிலைமை எல்லாம் புதிய ஜனாதிபதிக்கு புரியவில்லை என்றே தெரிகிறது.
இராணுவம் கொண்டு மக்களை அடக்கிவிட முடியாது. அவ்வாறான அடக்குமுறைகளுக்கு நாம் என்றும் இடமளிக்கவும் போவதில்லை.
இந்தப்போராட்டங்கள் எதிர்க்காலத்திலும் தொடரும். மக்களின் உண்மையான எதிரி யார் என்பதை முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி மட்டுமன்றி, ஒட்டுமொத்த நாடாளுமன்றமும் மக்களால் நிராகரிக்கப்பட்டதாகும். எனவே, உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்து, மீண்டும் பொதுத் தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டும்.
அவ்வாறு இடம்பெற்றால் மட்டுமே நாட்டை மீட்டெடுக்க முடியும். அதுவரை இந்தப் போராட்டமும் தொடரும்- என்றார்.