காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பாக வெளிப்படையான விசாரணைகளை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க சர்வதேச சமூகம் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை வலியுறுத்தினார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, நிராயுதபாணிகளாக ஜனநாயக ரீதியாக போராடிய நபர்கள் மீது, இன்று அதிகாலை மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலால் பல இளைஞர்கள் காயமடைந்துள்ளதோடு, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று 24 மணிநேரம் முடிவும் முன்னர், மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
நாடாளுமன்ற உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள, மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட ஒருவராகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காணப்படுகிறார்.
அரசமைப்பை பாதுகாப்பதாக கூறி ஜனாதிபதியாக வந்துள்ள இவர், அரசமைப்பின் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள விமர்சனம் செய்யும் மற்றும் எதிர்ப்பை வெளியிடும் உரிமையை இல்லாது செய்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இருந்து, இன்றைய தினத்திற்குள் வெளியேறுவோம் என போராட்டக்காரர்கள் கூறியிருந்தார்கள்.
இந்த நிலையில்தான் இவ்வாறான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எதிர்க்காலத்தில் பாரதூரமான நிகழ்வுகள் நிகழுமாக இருந்தால் அதற்கான முழுப்பொறுப்பையும் ஜனாதிபதியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இன்றைய தாக்குதலின்போது தேசிய மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையும் நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
இதனால், எமது நாட்டுக்கு சர்வதேச ரீதியாக அவப்பெயர் வந்துள்ளது.
அமைதியாக போராடும் மக்களை இராணுவம் மற்றும் பொலிஸைக் கொண்டு அடக்க முற்படுவதை ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அத்தோடு, இன்று நடைபெற்ற இந்த அரசமைப்புக்கு முரணான தாக்குதல் சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச சமூகத்திடமும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களிடமும் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த சம்பவம் தொடர்பாக பூரண விசாரணைகள் மேற்கொள்ளவும் இவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.- என்றார்.