தமக்கு நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்மீது நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிப்பதாகவும் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாடு செல்வதற்கான பயணத்தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒக்டோபர் 26ஆம் திகதி வரை குறித்த தடையை நீடித்து கொழும்பு பிரதான நீதவான் ஹர்ஷன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தென் மாகாண முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோனால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அல்லது நிதிச் சபையின் அனுமதியின்றி அமெரிக்க நிறுவனத்திற்கு, 6.5 மில்லியன் டொலர்களை செலுத்தி அவர் குற்றம் புரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2022 ஜனவரி 18ஆம் திகதி செலுத்த வேண்டிய முறிப் பத்திரங்கள் மூலம் அரசிற்கு 500 மில்லியன் டொலர் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆளுநராக கடமையாற்றிய காலத்தில், உற்றார் உறவினர்களை பதவிகளுக்கு நியமித்ததன் மூலமும், திறைசேரி மற்றும் பிணை முறிகள் தொடர்பான இரகசிய தகவல்களை வெளியிட்டதாகவும் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன் மூலமும் இலங்கை அரசாங்கத்திற்கு 10.04 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில் அறிக்கையொன்றினை வெளியிட்டு அஜித் நிவார்ட் கப்ரால் இதனை மறுத்துள்ளார்.