ஐரோப்பிய நாடுகளுக்கு நோர்ட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித்தடம் வழியாக மேற்கொண்டு வரும் எரிவாயு விநியோகத்தை 20 சதவீதமாக ரஷ்யா குறைத்துள்ளது.
ஏற்கனவே, வெறும் 40 சதவீத கொள்ளளவு மட்டுமே ரஷ்யா எரிவாயு விநியோகம் செய்து வந்த நிலையில், தற்போது அது மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜேர்மனியின் எரிவாயு வழித்தட ஒழுங்காற்று அமைப்பின் தலைவர் க்ளாஸ் முல்லர் கூறுகையில்,
‘நோர்ட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித்தடம் வழியாக அனுப்பப்படும் எரிவாயுவின் அளவைக் குறைக்கவிருப்பதாக ஏற்கெனவே ரஷ்யா கூறியிருந்தது. அதன்படி, அந்த வழித் தடம் வழியாக ஜேர்மனிக்கு வரும் எரிவாயு, தினசரி கொள்ளளவில் வெறும் 20 சதவீதம் மட்டுமே உள்ளது.
எரிவாயு என்பது வர்த்தகப் பொருள் என்ற நிலையிலிருந்து மாறி, தற்போது அதனை தனது வெளியுறவுக் கொள்கையின் ஓர் அங்கமாக ரஷ்யா மாற்றியுள்ளது. அந்த நாட்டின் போர்த் தந்திரத்தின் ஒரு பகுதியாகவும் எரிவாயு விநியோகம் ஆகியிருக்கலாம்’ என கூறினார்.
எரிவாயு குழாய் வழித்தடத்தில் இடையிடையே பொருத்தப்பட்டுள்ள இயந்திரங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்குவதற்காக விநியோகத்தை குறைக்கப் போவதாக ரஷ்யா கூறியிருந்தாலும், உக்ரைன் விவகாரத்தில் தங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடியாகவே ரஷ்யா இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டுகின்றன.
அத்துடன், இது எரிபொருள் விநியோகத்தை ரஷ்யா முழுமையாக நிறுத்தலாம் என்ற அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.