பொருளாதார நெருக்கடியால் தத்தளித்துக் கொண்டிருக்கும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் தனது ஆதரவுக்கரத்தினை நீட்டவுள்ளதாக அறிவித்துள்ளது.
முன்னதாக, இந்த ஆண்டின் ஆரம்பித்திலிருந்தே அந்நியச்செலாவனி கையிருப்பு இன்மை, சுற்றுலாப்பயணத்துறை வீழ்ச்சி, உள்நாட்டு உற்பத்தியின் மந்த நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இலங்கையால் பெற்ற கடன்களைக் கூட மீளத்திருப்பிச் செலுத்த முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தது.
குறிப்பாக, ஏப்ரல், மே மாதங்களில் கடன் பெற்றவர்களுக்கு வட்டி வீதத்தினையோ, கடன் தவணைப் பணத்தினையோ செலுத்த முடியாது என்ற நிலைமையை இலங்கை அடைந்திருந்ததோடு தனது இயலாமையை உத்தியோகப்பூர்வமாகவும் அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்தியா, அயல்நாட்டிற்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் உலர் உணவுகள், எரிபொருள், மருந்துப்பொருட்கள் என்று அதிதியாவசியமான தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பல்வேறு உதவிகளை வழங்கியது.
குறிப்பாக, இந்தியா, இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரையில் கடன் எல்லை அடிப்படையில் 3.5பில்லியன் அமெரிக்க டெலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. அதேவேளை, கணிசமான நிவாரணப்பொருட்களையும் இந்தியா கையளித்து வருகின்றது.
இறுதியாக, 40000 மெற்றிக் தொன் அரிசி, 500 மெற்றிக்; தொன் பால்மா மற்றும் 100 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான மருந்துப் பொருட்கள் அடங்கிய 22 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உதவிப் பொருட்கள் தமிழ் நாட்டினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன நிலையில் அவற்றின் பிறிதொரு தொகுதியும் இந்தவாரம் கையளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வெளியே ஊடகவியலாளர்களைச் சந்தித்திருந்த இந்திய வெளிவிவாகரத்துறை அமைச்சர் கலாநிதி.எஸ்.ஜெய்சங்கர், ‘நாங்கள் இலங்கைக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறோம்.
அந்நாட்டுக்கு நாங்கள் உதவ முயற்சிக்கிறோம், அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் நாங்கள் எப்போதும் மிகவும் உதவியாக இருக்கிறோம்’ என்று கூறினார்.
அத்துடன், ‘இலங்கையில் உள்ள அரசியல் தரப்பினர் சொந்த பிரச்சினைகளை தீர்க்க முற்பட்டுள்ளார்கள். எனவே அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போதைக்கு இலங்கை அகதிகள் நெருக்கடி எதுவும் இந்தியாவுக்கு இல்லை,’ என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில், இலங்கையின் அரசியலமைப்புக்கு அமைவாக, நாடாளுமன்றத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச்செய்தியில், மிக முக்கியமாக, ‘நிறுவனமயப்படுத்தப்பட்ட ஜனநாயக வழிமுறைகள், நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு ரீதியான கட்டமைப்பு ஆகியவற்றின் ஊடாக ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சியை அடையவிரும்பும் இலங்கை மக்களின் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும்’ என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இந்தியா, இலங்கை இடையிலான நெருக்கமானதும், தொன்மைவாய்ந்ததும், நட்புரீதியிலானதுமான உறவை வலுவாக்கவும் மக்களின் பரஸ்பர நலனுக்காகவும் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும்’ அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கவொரு விடயமாகும்.
பிரதமர் நரேந்திரமோடி, மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரின் கூற்றுக்களின் பிரகாரம், இலங்கையின் நெருக்கடிகளுக்கு தொடர்ச்சியான உதவியளிப்புக்கள் செய்யப்படவுள்ளன என்பது வெளிப்பட்டுள்ளது. அதற்கான பேச்சுக்கள் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஆகியோரை நேரில் சந்தித்துள்ளார்.
சம்பிரதாய பூர்வமான சந்திப்புக்களாக அவை இருந்தாலும், இந்தச் சந்திப்புக்களின்போது, இந்தியாவின், ஒத்துழைப்புக்கள் தொடரவுள்ளமைக்கான சமிக்ஞைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அதேநேரம் இலங்கை தரப்பிலும், இதுகால வரையிலான உதவிகள் மீள் நினைவுபடுத்தப்பட்டு நன்றி கூறப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
அதேநேரம், உயர்ஸ்தானிகர், கோபால் பக்லே, எதிர்க்கட்சிகளில் ஒன்றான மக்கள் விடுதலை முன்னணியியையும் சந்தித்துள்ளார். இவ்வாறான ஆளும், எதிர்த்தரப்பின் சந்திப்புக்கள், உள்நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை விரைந்து ஏற்படுத்துவரை ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளது.
இவ்வாறு இந்தியா அரசியல், பொருளாதார ரீதியாக தனது அயலுறவுக்கு முதன்மைத் தானம் என்ற கொள்கையின் அடிப்படையில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
அதிலும் குறிப்பாக, இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் காணப்படும் வரலாற்று ரீதியான தொடர்புகளின் அடிப்படையில் இந்தியா தனது தார்மீக கடமையை செவ்வனே நிறைவேற்றி வருகின்றது எனலாம்.
அதேநேரம், அண்மையில், இந்திய லோக்சபாவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் எஸ்.இராமலிங்கம் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடத்தில் கேள்வியொன்றைத் தொடுத்திருந்தார்.
அந்த வினாவில், இலங்கைக்கு, இதுவரையில் இந்தியா வழங்கிய உதவிகளின் பெறுமதியை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கமைவாக, பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்கு கடந்த ஒரு தசாப்த காலத்துக்குள் 1850.64 மில்லியன் டொலர்களை கடன் வரிகளாக வழங்கியிருப்பதாக குறிப்பிட்டார்.
அத்துடன், குறித்த கடன்வரியானது, தொடரூந்து, உட்கட்டமைப்பு, பாதுகாப்பு, எரிசக்தி, பெற்றோலியம் மற்றும் உரம் போன்றவற்றுக்காக வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்கூறியிருக்கின்றார்.
ஆக, இந்தியாவின் உதவிக்கரம் தொடர்ந்தும் நீண்டுகொண்டிருக்கின்றது இலங்கை மக்களின் மீட்சிக்காகவே. இலங்கையும், இலங்கை மக்களும் அதுபற்றிய சரியான புரிதல் கொள்வதே காலத்தின் தேவையாகவுள்ளது.
-யே.பெனிற்லஸ்-