யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் முதலாவது அணி மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வின் அறிமுக வைபவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றது.
பல்கலைக்கழக வளாகத்தினுள் அமந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் விசேட அபிஷேக ஆராதனைகளையடுத்து, கைலாசபதி கலையரங்கில் நிழ்வுகள் ஆரம்பமாகின.
க. பொ. த உயர்தர 2019 ஆம் ஆண்டு கலைப் பிரிவில் தோற்றி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் கலைப் பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களில் சுமார் 50 மாணவர்கள் இந்து கற்கைகள் பீடத்தில் 2020 / 2021 ஆம் கல்வியாண்டுக்காகப் பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்.
இவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வே கடந்த புதன்கிழமை அறிமுக வைபவத்துடன் ஆரம்பமாகியது.
இந்து கற்கைகள் பீடாதிபதி கலாநிதி சுகந்தினி ஶ்ரீ முரளீதரன் தலைமையில் இடம்மெற்ற இந்த அறிமுக நிகழ்வில் தவத்திரு. வேலன் சுவாமிகள், யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினரும், சைவசமயப் பெரியாருமான செஞ்சொற் செல்வர் ஆறு. திருமுருகன், முன்னாள் துணைவேந்தர்களான பேராசியர் என். சண்முகலிங்கன், வாழ்நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை மற்றும் முன்னாள் பீடாதிபதிகள் மற்றும் துறைத் தலைவர்கள், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், பதிவாளர் வி. காண்டீபன், நலச் சேவைகள் பணிப்பாளர் கலாநிதி சி. ராஜ் உமேஷ், மாணவர் ஒழுக்காற்று – சட்ட நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் சி. விஜயகுமார், துறைத் தலைவர்கள், நிர்வாக அலுவலர்கள், பதில் நூலகர் மற்றும் விரிவுரையாளர்கள், புதுமுக மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.