இந்தியாவின் தென்பிராந்தியம் அடுத்துவரும் நாட்களில் ஆபத்தில் சிக்கப்போகும் சூழல்கள் அதிகரித்துள்ளன என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்தியத் தென்பிராந்தியம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆசியப்பிராந்தியமும், அமெரிக்கா, மற்றும் மேற்குலக நாடுகளின் சுதந்திரமான இந்துசமுத்திரத்தின் ஊடான கடற்பிராந்தியமும் தான் நெருக்கடிகளை எதிர்கொள்ளப்போகின்றது.
ஆம், சீனாவின் யுவான் வாங் – 5 என்ற கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிக்கவுள்ளது.
இந்தக் கப்பல் எதிர்வரும் 11ஆம் திகதியிலிருந்து 17ஆம் திகதி வரையில் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நங்கூரமிடப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
‘சீனக் கப்பலுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஆறு நாட்களுக்கு நங்கூரமிடப்பட்டு, தேவையான வசதிகளை பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது’ என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேர்ணல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள சீன விஞ்ஞான ஆய்வு கப்பலான யுவான் வாங் 5 தொடர்பில் கடற்படைக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும், அது குறித்து தனக்கு போதுமான தகவல்கள் தெரியாது என்றும் கடற்படடைப்பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஆக, சீன கப்பல் வருகை தொடர்பாக, இலங்கையின் படைகளுக்குள்ளேயே தெளிவான நிலைப்பாடுகள் காணப்படவில்லை என்பது இதிலிருந்து வெளிப்படுகின்றது. இதேபோன்று தான் இலங்கை அரசாங்கத்திற்குள்ளும் நிலைமைகள் காணப்படுகின்றன.
இலங்கை அரசாங்கத்தின் எந்த அதிகாரக்கட்டமைப்பு சீனக் கப்பலின் பிரவேசத்திற்கு அனுமதி வழங்கியது என்பது குறித்து தற்போது வரையில் வெளிப்படையான தகவல்கள் இல்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கோ, பிரதமர் தினேஷ்குணவர்த்தனவோ, இந்த விடயத்தினை பகிரங்கமாக வெளிப்படுத்துவற்கு தயாராக இல்லை.
எனினும் சீனாவின் ஜியாங்யின் துறைமுகத்திலிருந்து கடந்த 13ஆம் திகதி புறப்பட்ட யுவான் வாங் கப்பல் தற்போது தாய்வானைக் கடந்து இந்தியப் பெருங்கடலில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
அம்பாந்தோட்டைக்குச் செல்லும் யுவான் வாங் 5 கப்பலானது, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வடமேற்குப் பகுதியில் விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளைத் நடத்தும் என்று பாதை மற்றும் மண்டலம் முன்முயற்சியின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வாங் 5 இன் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு விஜயம் செய்வது, இலங்கை மற்றும் பிராந்திய வளரும் நாடுகளுக்கு தங்களின் சொந்த விண்வெளி திட்டங்களை கற்றுக்கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்’ என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
ஆனால், யுவான் வாங் 5 கப்பலானது, ‘யுவான் வாங்’ தொடரின் மூன்றாம் தலைமுறை கண்காணிப்பு கப்பலாகும், 25,000 தொன்களைக் கொண்ட இக்கப்பலானது 29 செப்டம்பர் 2007 அன்று சேவையில் சேர்ந்தது.
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் மூலோபாய ஆதரவுப் படையால் செயற்கைக்கோள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கண்காணிக்கவும் ஆதரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தக் கப்பலானது, இந்தியப் பெருங்கடலின் வடமேற்கு கடல் பகுதியில் விண்வெளி கண்காணிப்பு, செயற்கைக்கோள் கட்டுப்பாடு மற்றும் பிற சோதனைகள் ஆகியவற்றில் ஈடுபடவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் உள்ளன.
ஆனால், திடீரென இலங்கையின் அம்பாந்தோட்டைக்கு வருகை தருவதற்கும், இந்திப் பெருங்கடலில் பரிசோதனைகளில் ஈடுபடுவதற்கும் காரணங்கள் இல்லாமலில்லை.
இதன் காரணமாகவே, இந்தியா தனது விசேட கரிசனையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, ‘சீனக் கப்பலின் உத்தேச விஜயம் பற்றிய அறிக்கைகள் எங்களுக்குத் தெரியும்.
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடுகளையும் அரசாங்கம் கவனமாகக் கண்காணித்து, அவற்றைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறது என்பதை மட்டும் கூறுகிறேன்.
இது ஒரு தெளிவான செய்தியாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,’ என்று என்று இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.
இதற்கு உடனடியாகவே, பதலிளித்த சீனா, தமது கடல்சார் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் ஆய்வு செய்து, தமது சாதாரண மற்றும் சட்டபூர்வமான கடல்சார் நடவடிக்கைகளில் தலையிடுவதை தவிர்ப்பார்கள் என்று தாம் நம்புவதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனால், சீனா தனது கப்பலின் செயற்பாடுகள் குறித்து வெளிப்படைத்தன்மையுடன் எந்தவொரு உரையாடலையும் செய்யவில்லை.
அதேநேரம், இந்தியா தனது நாட்டின் தென்பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பில் அதிகமான கரிசனையைக் கொண்டிருக்கின்றது. இதுபற்றி இலங்கை அரசாங்கத்திற்கு வெளிப்படுத்தியிருப்பதாகவும் தகவல்கள் உள்ளன.
குறிப்பாக, மிகவும் சக்தி வாய்ந்த இந்த சீனக் கப்பல் 750 கிலோ மீற்றருக்கு அதிகமான சுற்றளவில் உள்ள அனைத்து நிலைகளையும் செயற்கைக்கோள் உதவியுடன் உளவு பார்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.
அதனடிப்படையில் அம்பாந்தோட்டையில் இருந்தவாறே, கூடங்குளம், கல்பாக்கம் அணுசக்தி ஆராய்ச்சி மையங்கள், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்னிந்தியாவின் ஆறு துறைமுகங்கள், தமிழகத்தில் உள்ள இந்தியப்படைகளின் தளங்கள் ஆகியவற்றை இலகுவாக உளவு பார்த்து விட முடியும் என்பது பாதுகாப்பு ஆய்வாளர்களின் கருத்தாகவுள்ளது.
அவ்வாறான நிலையில், இலங்கை எந்த அடிப்படையில் சீனக் கப்பலுக்கு அனுமதி அளித்தது. இலங்கை, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பதற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு விளைகின்றதா என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.
இதேவேளை, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தின்போது, குறித்த துறைமுகத்தினை படை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியாது என்பது திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சீனக் கப்பலின் வருகையும் அதன் செயற்பாடுகளும் அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தினை மீறும் செயற்பாடாகும். அதேநேரம் ஐக்கிய நாடுகள் கடல் சட்ட உடன்படிக்கையை மீறும் செயற்பாடாகும் இது காணப்படுகின்றது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, 1987ஆம் ஆண்டு இந்திய, இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் அந்த ஒப்பந்தத்திற்கு முற்றுமுழுதான எதிர்ச்செயற்படாகவே உள்ளது.
ஆகவே, உள்நாட்டு, அயல்நாட்டு வெளிநாட்டு ஒப்பந்தங்கள், சட்டங்களை மீறும் வகையில் சீன கப்பல் விஜயத்திற்கு இலங்கை அரசு அனுமதி அளிக்ககூடாது. அதனையும் தாண்டி அனுமதி அளிக்கப்படுகின்றதாக இருந்தால் அதன் உள்ளார்ந்தம் வேறு.
-யே.பெனிற்லஸ்-