குறுகிய காலத்திற்குள் பொதுத் தேர்தலொன்றுக்கு செல்ல தயாராக இருந்தால், சர்வக்கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கத் தயாராக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், மூன்று வருடங்கள் வீணாகிவிட்டன. எமது அனைவரது நேரமும் விரயமாகிவிட்டது. இதனால்தான் மக்கள் இந்த நாடாளுமன்றத்தை உடனடியாக கலைக்குமாறு வலிறுத்தி வருகிறார்கள்.
சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆனால், மகாநாயக்க தேரர்கள், புத்திஜீவிகள், பேராசிரியர்கள் என அனைவரும் விரைவில் ஒரு தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர்.
எனவே, எமது ஆதரவு சர்வக்கட்சி அரசாங்கத்துக்கு வேண்டுமாக இருந்தால், மிக விரைவில் பொதுத் தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டும்.
இதற்கான உத்தரவாதத்தை ஜனாதிபதி எமக்கு வழங்கினால் நாம் ஒத்துழைப்பு வழங்கத் தயாராகவே உள்ளோம்.
அதனைவிடுத்து, இதேபோன்று இந்த நாட்டை 2025 ஆம் ஆண்டுவரை கொண்டுசெல்ல முடியாது. இந்த அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது.
இதனை நம்பி, சர்வதேச நாடுகள் ஒருபோதும் கடன் கொடுக்காது. நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டுமாயின் நாடாளுமன்ற தேர்தலொன்று அவசியமாகும்.
குறைந்தது 6 அல்லது ஒரு வருடத்திலேனும் தேர்தலுக்குச் செல்ல வேண்டும். இதனைத்தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமும் மகாநாயக்க தேரர்கள், புத்திஜீவிகள் என அனைவரும் வலியுறுத்தினார்கள்.
இதனை நினைவில் வைத்து செயற்பட்டால் சிறப்பாக இருக்கும்- என்றார்.