கடந்த 2004ஆம் ஆண்டு 25 ஆக இருந்த வடகிழக்கு தமிழ் பிரதிநிதித்துவம் தற்போது வட கிழக்கு தமிழர்களுக்கு எதிரான பேரினவாத அரசியல் செயல்பாடுகளினால் குறைவடைந்து வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) நடைப்பெற்ற ஜனாதிபதியின் சிம்மாசன உரையின் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘நாட்டில் 74 வருடங்களாக ஆட்சி செய்த ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் பல உரைகளை பாராளுமன்றில் ஆற்றியிருந்தாலும் இந்த நாட்டினதும், நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை தீர்மானிப்பது பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஜனாதிபதி ஒருவர் என்பது சகலரும் அறிந்ததே இலங்கையராக அனைவரும் ஒன்றினைந்து வாழ வேண்டும் என குறிப்பிட்டாலும் கூட ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிக்கு தமிழ் பேசும் ஒருவர் தெரிவு செய்யப்படவில்லை. விரும்பினாலும், விரும்பாவிடினும் பெரும்பான்மையாளரில் ஒருவரை தலைவராக தெரிவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
எமது மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேரதலில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்க வேண்டிய நிலைப்பாடு இருந்தது.
2015ஆம் ஆண்டு பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தோம். அதே போலதான் தொடர்ச்சியாக தேர்தலில் இரு வேட்பாளர்களின் எவர் சிறந்தவர் என ஆராய்ந்து அவருக்கு ஆதரவு வழங்கியுள்ளோம்.
இதுவரையில் ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் அனைவரும் நாட்டு மக்களின் பொருளாதாரத்தை இல்லாதொழித்துள்ளார்கள்.
தமிழ் சமூகம் பொருளாதாரம் மாத்திரமல்ல அதற்கு அப்பாற்பட்ட பல இன்னல்களை எதிர்க்கொண்டுள்ளது. அவசரகால சட்டத்தை கொண்டு தற்போது தெற்கில் கைது இடம்பெறுகிறது. நாங்கள் 1979ஆம் ஆண்டு முதல் அவசரகால சட்டத்தை எதிர்த்து வருகிறோம்.
அவசர கால சட்டத்திற்கு எதிராக இன்று எதிர்தரப்பினர் குரல் கொடுக்கிறார்கள்.தமிழ் மக்கள் அவசரகால சட்டத்தினால் பல இன்னல்களை அனுபவித்துள்ளதை நினைவுப்படுத்த வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி முன்னேற்றத்திற்கு எந்த அரசாங்கமும் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்கவில்லை.
தொடர்ச்சியாக தமிழ் சமூகம் ஏமாற்றப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்த அரசாங்கம் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவில்லை. பாலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவில்லை, மாறாக எமது வளங்கள குறிப்பாக மண் வளம் சூறையாடப்படுகிறது.
நல்லாட்சி அரசாங்கத்தில் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் அமைச்சர் ஹெலிகொப்டரில் மன்னாருக்கு சென்றுள்ளார். மன்னார் மாவட்டத்தில் உள்ள வளங்களை சூறையாடுவதற்கான நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகின்றன. குச்சவெளி பகுதியின் பெயரை மாற்றுவதற்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை, மறுபுறம் விவசாயிகளும் உரம் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த வருடம் வழங்கப்பட்ட அரச தொழில் நியமனத்தில் தமிழ் பேசுபவர்களில் 2000 பேருக்கு கூட தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. ஆகவே தமிழ் மக்களின் வாழ்வாதாரம் குறித்து சிந்திக்காத தலைவர்கள் நாட்டை ஆண்டுள்ளார்கள்.
வடக்கு மற்றும் கிழக்கு இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் இனி வரும் காலங்களில் தமிழ் பிரதிநிதித்துவத்தின் வீதம் குறைவடையும் நிலை ஏற்படும்.
மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நடுத்தரவர்க்கத்தினர் பெரிதளவில் பாதிக்கப்படுவார்கள். மாதம் 4 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட மின்கட்டணம் இனிவரும் காலங்களில் 6 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க கூடும்.
மின்கட்டணம் பன்மடங்கு அதிகரித்துள்ளதால் நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் மோசமான பாதிப்புக்களை எதிர்க்கொள்வார்கள். நீர்க்கட்டணம் அதிகரிக்கவுள்ளது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதால் அனைத்து சேவைகளின் கட்டணமும் உயர்வடைந்துள்ளது.
பொருளாதார நெருக்கடியினை ஏற்படுத்தியவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை வழங்க வேண்டும். தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் இன்று மீண்டும் ஒன்றினைந்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியினை ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து ஜனாதிபதி தனது சிம்மாசன உரையில் குறிப்பிட்டிருந்தால் அது மகிழ்வுக்குரியதாக அமைந்திருக்கும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.