அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது வணிக பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணையில் நியூயோர்க் மாநில அட்டர்னி ஜெனரல் முன்பு ஆஜரானபோது, சத்தியப்பிரமாணத்தின் கீழ் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் அமைப்பின் நிதி தொடர்பான நீண்டகால சிவில் விசாரணையில் சாட்சியமளிக்க ட்ரம்ப் நேற்று (புதன்கிழமை) காலை மாநில அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸின் அலுவலகத்தில் ஆஜரானார்.
இதன்போது, ‘அமெரிக்க அரசியலமைப்பின் கீழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்படும் உரிமைகள் மற்றும் சலுகைகளின் கீழ் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க நான் மறுத்துவிட்டேன்’ என்று ட்ரம்ப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசியலமைப்பின் ஐந்தாவது திருத்தம் சுய குற்றச்சாட்டிலிருந்து பாதுகாக்க அதிகாரிகளால் கேள்வி கேட்கப்படும்போது அமைதியாக இருக்க உரிமை அளிக்கிறது.
பல அமெரிக்க ஊடகங்களின்படி, முன்னாள் ஜனாதிபதியால் ரகசிய ஆவணங்களை தவறாகக் கையாள்வது குறித்து தனி விசாரணையின் ஒரு பகுதியாக எப்.பி.ஐ. முகவர்கள் புளோரிடாவில் உள்ள அவரது வீட்டை சோதனையிட்ட இரண்டு நாட்களுக்குள் ட்ரம்ப் நியூயோர்க்கில் ஆஜரானார்.
ட்ரம்பின் நிறுவனம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக நிதி மோசடி மற்றும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ட்ரம்ப், அவரது நிறுவனம் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் மீது நியூயோர்க் மாகாண நீதித்துறை வழக்கு பதிவு செய்து நீண்டகாலமாக விசாரணை நடத்தி வருகின்றது.
முன்னதாக, ட்ரம்ப் கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியபோது அரசு தொடர்பான இரகசிய ஆவணங்களை எடுத்து சென்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நேற்று முன்தினம் புளோரிடாவில் உள்ள அவரது கடற்கரை இல்லமான மர்-எ-லாகோ என்ற எஸ்டேட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.