அவசரக்காலச் சட்டத்தைப் பயன்படுத்தி, போராட்டக்காரர்களை கைது செய்யும் செயற்பாட்டை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்றும் இது சர்வதேச மட்டத்தில் இலங்கையை அந்நியப்படுத்தும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்துமபண்டார தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மக்களால் அன்றி நாடாளுமன்றால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாவார்.
இந்த நாடு பல போராட்டங்களை கடந்துதான் வந்துள்ளது. 30 வருட கால யுத்தத்தை நாம் எதிர்க்கொண்டோம்;. 1971, 1989 களில் மக்கள் கொலை செய்யப்பட்டார்கள்.
இவ்வாறான பல சம்பவங்களை கடந்துவந்துள்ள போதிலும், தற்போது ஏற்பட்டுள்ளமையானது மக்கள் புரட்சியாகும். இந்தப் புரட்சியால்தான் ஜனாதிபதியும், பிரதமரும் வீட்டுக்குச் செல்லவேண்டியேற்பட்டது.
ஆனால், தற்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் கட்டுப்படுத்தி வருகிறது.
ஜனாதிபதியின் கதிரையில் அமர்தார்கள் என மக்கள் கைது செய்யப்படுகிறார்கள். தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கைது செய்யப்படுகிறார்கள்.
வீடுகளை எரித்தவர்கள், கொலை செய்வதவர்களை கைது செய்தால் எந்தப் பிரச்சினையும் எமக்கு கிடையாது.
போராட்டக்காரர்களை அடக்குவதானது சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கும்போது, சர்வதேச ஆதரவை கோரி நிற்கும் இந்த அரசாங்கமானது போராட்டக்காரர்களை அடக்குவது ஏற்புடையதல்ல.
அறந்தலாவை பிக்குகளை கொலை செய்ய துணை நின்றவர்கள் இன்று நாடாளுமன்றில் உள்ளார்கள். ஸ்ரீமாபோதி, தளதா மாளிகை மீது தாக்குதல் மேற்கொண்டவர்களும் இன்று நாடாளுமன்றில் உள்ளார்கள்.
இவ்வாறான நிலையில், தங்களின் உரிமைக்காக போராடிய மக்களை கைது செய்வதானது சரியான செயற்பாடா என அரசாங்கத்திடம் நாம் கேட்க விரும்புகிறோம்.
இது சர்வதேச ரீதியாக இலங்கையை மேலும் அந்நியப்படுத்தும் என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தில் விசேட கவணத்தை செலுத்த வேண்டும். – என்றார்.