இந்தியாவில் பிறந்து பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் குடியுரிமை பெற்றுள்ள பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கொடூரமாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நியூயோர்க்கில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற லாப நோக்கற்ற ஷட்டாக்குவா நிறுவன நிகழ்வில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்தபோதே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தற்போது வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருப்பதாகவும் பேச முடியாத நிலையில் இருப்பதாகவும் அவரது முகவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் ருஷ்டி, ஒரு கண்ணை இழக்கக்கூடும் எனவும் கையில் உள்ள நரம்புகள் அறுபட்டிருப்பதாகவும் கல்லீரல் சேதமடைந்திருப்பதாகவும் அவரது முகவர் ஆண்ட்ரூ வெஸ்லி மேலும் கூறினார்.
அத்துடன், குறித்த தாக்குதல்தாரி மேடையில் ருஷ்டியை செவ்வி எடுத்துக்கொண்டிருந்த நபரையும் கத்தியால் குத்தியதாக நியூயோர்க் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். செவ்வி எடுத்தவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த அந்த தாக்குதல்தாரி, கறுப்பு முகமூடி அணிந்துக்கொண்டு திடீரென்று மேடை மீது ஏறி ருஷ்டியை தாக்கத் தொடங்கியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், உடனடியாக சல்மான் ருஷ்டியிடம் விரைந்து சென்று அவரை மீட்டு ஹெலிகொப்டரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஷட்டாக்குவா நிறுவன நிகழ்வில் இருந்த ஒரு மருத்துவர், கத்தியால் குத்தப்பட்ட பிறகு ருஷ்டிக்கு முதலுதவி செய்ததாகவும், ருஷ்டியின் கழுத்தின் வலது பக்கம் உட்பட பல இடங்களில் அவர் கத்திக் குத்து காயங்களால் அவதிப்பட்டதாகவும் ரீடா லிண்ட்மேன் என்ற மருத்துவர் நியூயோர்க் டைம்ஸிடம் கூறியுள்ளார்.
சம்பவ இடத்தில் இருந்து சல்மான் ருஷ்டியை தாக்கிய நபர் பிடிபட்டுள்ளார். அவரது பெயர் ஹாதி மட்டார். நியூஜெர்சியில் வசிப்பவர் எனத் தெரியவந்துள்ளது.
அவர் தாக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்பது பற்றி இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. தாக்கியவரின் பையில் இருந்த மின்னணு சாதனங்களை பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
‘சாத்தானின்’ வசனங்கள் என்ற புத்தகத்தை எழுதிய பின்னர் பல ஆண்டுகளாக மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, உயிரிய புக்கர் பரிசு வென்றவர் ஆவார்.
கடந்த 2007ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசி சல்மான் ருஷ்டியின் இலக்கிய சேவைக்காக ‘நைட் பேச்சிலர்’ என்ற சர் பட்டம் வழங்கி கௌரவித்தார். 2008இல் அமெரிக்க கலை மற்றும் எழுத்து அகாடெமியில் அவர் அங்கத்தினராக தேர்வானார். டைம்ஸ் இதழ் 1945ஆம் ஆண்டுக்குப் பிறகான 50 மிகச்சிறந்த பிரித்தானிய எழுத்தாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் இவருக்கு பதின்மூன்றாவது இடம் வழங்கப்பட்டது.
2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவர் லூக்கா அண்ட் ஃபயர் ஒஃப் லைஃப் என்ற புத்தகத்தை எழுதினார்.