நுவரெலியா, லபுக்கலை பகுதியை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் லபுக்கலை மேற்பிரிவு பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பஸ்ஸில் 30 இற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளதாகவும், விபத்தின் போது 4 பேர் மாத்திரம் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதிக்கு பஸ் வண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதாலேயே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த 4 பேரும், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு காயமடைந்தவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இவ்விபத்து தொடர்பில் நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.