பயங்கரவாதத்திற்கு நிதியுதவி தொடர்பான நடவடிக்கைகளில் முன்னர் ஈடுபட்டிருந்த சில அமைப்புக்கள் இனிமேல் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடாது என்பதனால் அவர்கள் மீதான தடை நீக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, 577 நபர்கள் மற்றும் 18 அமைப்புகளில் இருந்து 316 நபர்கள் மற்றும் 6 அமைப்புக்களை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
பல தரப்பினருடன் நடத்திய நீண்ட ஆய்வுக்குப் பின்னர் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டதாக்க பாதுகாப்பு அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் என்றும் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைக்கு நிதியுதவி செய்தததாக ஆதாரங்கள் எழும் பட்சத்தில் தடை செய்யப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அவுஸ்ரேலிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழீழ மக்கள் பேரவை, கனேடிய தமிழ் காங்கிரஸ் மற்றும் பிரிட்டிஷ் தமிழர் மன்றம் ஆகியன இம்மாதம் தடைபட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
இதேவேளை பயங்கரவாத நடவடிக்கைக்கு பணம் மற்றும் ஆதரவை வழங்கியதாக உறுதி செய்யப்பட்ட மேலும் 55 தனிநபர்கள் மற்றும் மூன்று அமைப்புகளை கறுப்புப்பட்டியலில் இணைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.