உத்தரப்பிரதேசத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கும் இலக்கை நிறைவேற்றுவதற்கான மற்றொரு படியாக, உத்திரப் பிரதேச அரசின் உட்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை மேம்பாட்டுத் துறைக்கும் டெலாய்ட் இந்தியாவுக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
மாநிலத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு வகுத்துள்ள கொள்கைகள் குறித்து இருதரப்புக்களுக்கும் இடையே கலந்துரையாடல் நடைபெற்றன.
சமீபத்தில், யோகி ஆதித்யநாத் அரசாங்கம், அடுத்த ஐந்தாண்டுகளில் உத்தரப்பிரதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒரு ட்ரில்லியன் டொலராக உயர்த்துவதற்கான வரைபடத்தைத் தயாரிப்பதற்காக ஜப்பானிய ஆலோசகர் டெலாய்ட் டச் டோமட்சுவுடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டது.
இந்நிலையில் குறித்த சந்திப்பு உட்;கட்டமைப்பு மற்றும் தொழில்துறை மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அரவிந்த் குமார் தலைமையில், ஒரு ட்ரில்லியன் டொலர் செயற்றிடத்தின் திட்டமிடல் மற்றும் நோடல் அதிகாரி அலோக் குமார், இன்வெஸ்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அபிஷேக் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின்போது, அரவிந்த் குமார், இத்துறையில் மாநில அரசு எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர் உச்சி மாநாடு 2023ஐக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை எடுத்துரைத்தார்.
முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மாநிலத்தால் அறிவிக்கப்பட்ட பல்வேறு கொள்கைகளையும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் முதலீட்டை ஈர்ப்பது குறித்து அரசாங்கம் மதிப்பாய்வு செய்து வருகிறது.
பல்வேறு துறைகள் தொடர்பான தற்போதைய கொள்கையை ஆய்வு செய்து, மாநிலத்திற்கு முதலீடு மற்றும் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் வகையில் தேவையான திருத்தங்கள் குறித்த அறிக்கையை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.