பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெறவிருக்கும் தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் மீண்டும் முன்னிலை பெற்றார்.
இது குறித்து ‘தி கன்சர்வேட்டிவ் ஹோம்’ வலைதளம் நேற்று (புதன்கிழமை) நடத்திய கருத்துக் கணிப்பில் 961 கட்சி வாக்காளர்கள் பங்கேற்றனர்.
அவர்களில் 60 சதவீதத்தினர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்கை 28 சதவீதத்தினர் ஆதரித்து வாக்களித்திருந்தனர்.
எந்த முடிவையும் எடுக்காத 9 சதவீத்தினரின் வாக்குகள் லிஸ் ட்ரஸ்ஸுக்கும் ரிஷி சுனக்குக்கும் இடையே சமமாகப் பங்கிடப்பட்டது. இதில், லிஸ் ட்ரஸ் 32 புள்ளிகள் முன்னிலை பெற்றதாக வலைதள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது.
பல்வேறு கட்டங்களாக நடந்த வாக்கெடுப்பில் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்கும், வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ்சும் இறுதி வேட்பாளர்களாக தேர்வாகினர்.
அவர்களில் ஒருவரை கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் தேர்வு செய்வதற்கு கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் தபால் மூலமும், ஒன்லைன் மூலமாகவும் வாக்களித்து வருகின்றனர். இந்த வாக்குப்பதிவு அடுத்த மாதம் 2ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான இறுதி சுற்றில் பழமைவாத கட்சியில் (கன்சர்வேடிவ்) மொத்தமுள்ள இரண்டு இலட்சம் உறுப்பினர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர்.
இந்த வாக்குகள் எண்ணப்பட்டு அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். செப்டம்பர் 5ஆம் திகதி வெற்றியாளர் அறிவிக்கப்பட உள்ளார். வெற்றியாளர் பிரித்தானியாவின் புதிய பிரதமராக அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.