முக்கிய வழித்தடங்களில் எதிர்வரும் செப்டம்பர் முதல் வார இறுதி நாட்களில் சிறப்பு புகையிரதங்கள் மற்றும் பேருந்து சேவைகளை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் பொது போக்குவரத்திற்கான தேவை அதிகரித்து வருவதால் பெரும்பாலான புகையிரதங்கள் முன்பதிவு செய்யப்படுகின்றமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தனவும் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக வாரயிறுதி நாட்களில் விசேட புகையிரத சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சிறப்பு புகையிரத சேவை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்த அவர், இரண்டு சோதனை ஓட்டங்கள் நிறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், போக்குவரத்து அமைச்சு வேறு சில இடங்களுக்கு ஒருங்கிணைந்த புகையிரத – பேருந்து சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுடன் இணைந்து பெலியத்தவிலிருந்து கதிர்காமத்திற்கு பயணிக்கும் பயணிகள் மறுநாள் அதே பாதையில் திரும்பிச் செல்லும் வகையில் ஒன்றிணைந்த பேருந்து சேவையை ஆரம்பிப்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, அனுராதபுரத்திற்கு வார இறுதி புகையிரத மற்றும் பேருந்து சேவையும், எட்டு புனித தலங்களுக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்து சேவையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
கண்டி, பாசிக்குடா மற்றும் கல் குடா போன்ற இடங்களுக்கும் இதேபோன்ற போக்குவரத்து திட்டங்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.