உலக உணவு திட்டம் இலங்கையில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களது உயிர்களைக் காப்பாற்றவும், அதிகரித்துவரும் உணவுப்பாதுகாப்பின்மையைத் தணிக்கவும் அவசர வேலைத்திட்டங்களில் அதிககவனம் செலுத்திவருகிறது.
அதனடிப்படையில் ஒகஸ்ட் மாதத்திலிருந்து முல்லைத்தீவு, காலி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இனங்காணப்பட்ட உணவுப் பாதுகாப்பற்ற மக்களுக்கு பண உதவியினை வழங்குத் திட்டத்தினை முதல்முதலாக நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளது.
கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்று வலுவுள்ளோர்களை பயனாளிகளாக உள்வாங்கி இத்திட்டத்தினை முதலாவதாக முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று ஆரம்பித்து வைத்துள்ளது.
மல்லாவி இலங்கை வங்கி கிளையில் நேற்று வங்கி முகாமையாளர் ஜெயசாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த உதவித்திட்டத்தினை வழங்கி ஆரம்பித்து வைத்தார்.
முதற்கட்டமாக மாந்தை கிழக்கில் 197 பயனாளிகளும், துணுக்காய் பிரதேச பிரிவில் 61 பயனாளிகளுமாக 258 பயனாளிகள் உள்வாங்கப்பட்டு ஒகஸ்ட் மாத உதவித்தொகையாக 15,000 ரூபா வழங்கி வைக்கப்பட்டது.
தெரிவு செய்யப்பட்ட சகல பயனாளிகளுக்கும் ஒகஸ்ட் மாதம் 15000 ஆயிரம் ரூபாயும், நான்கு அங்கத்தவர்களுக்கு மேற்பட்ட சமுர்த்தி பயனாளி குடும்பத்திற்கு மட்டும் அடுத்த இரு மாதங்களும் 7,500 ரூபாயும் ஏனையவர்களுக்கு 15,000ரூபாயும் வழங்கப்படவுள்ளது.
மேலும் ஏனைய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் பயனாளிகளின் தெரிவுகள் உலக உணவுத்திட்டம் மற்றும் பிரதேச செயலகம் ஊடாக தரவு வடிவமைப்பு இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ள நிலையில் அடுத்த வாரத்திற்குள் அவர்களுக்கான உதவித்தொகைகள் வழங்கப்படவுள்ளது.