வடகொரியாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்க, அமெரிக்க மற்றும் தென்கொரிய இராணுவம் மிகப்பெரிய கூட்டு போர்ப்பயிற்சியை தொடங்கியுள்ளது.
தென்கொரியாவில் நேற்று (திங்கட்கிழமை) தொடங்கிய ‘உல்ச்சி ஃப்ரீடம் ஷீல்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ராணுவப் பயிற்சி, அடுத்த மாதம் முதலாம் திகதி வரை நடைபெறும்.
இருநாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்கள், போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் வான், கடல், தரை என 3 வழிகளிலும் போர்ப்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வடகொரியாவுடன் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், கொரோனா பரவல் காரணமாகவும் அமெரிக்கா மற்றும் தென்கொரியா சமீப ஆண்டுகளாக இதுபோன்ற வருடாந்திர கூட்டு போர்ப்பயிற்சிகளை இரத்து செய்து வந்த நிலையில், தற்போது இருநாடுகளும் மீண்டும் தங்களது வழமையான பயிற்சிகளை தொடங்கியுள்ளன.
அமெரிக்கா மற்றும் தென்கொரியா தங்களது கூட்டு போர் பயிற்சிகளை தற்காப்பு நடவடிக்கை என கூறி வரும் நிலையில், அதை மறுக்கும் வடகொரியா அவை தங்கள் நாட்டின் மீது படையெடுப்பதற்கான ஒத்திகைகள் என குற்றம் சாட்டுகிறது.
இந்த நிலையில், இந்தப் போர்ப் பயிற்சி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதற்கு, தங்களது அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் வட கொரியா பதிலடி கொடுக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.